/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5.55 ஏக்கர் அரசு இடத்தை மீட்க விசாரணை
/
5.55 ஏக்கர் அரசு இடத்தை மீட்க விசாரணை
ADDED : மே 10, 2024 01:53 AM

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் தாலுகா, செம்மஞ்சேரி வில்லேஜ் சர்வே எண்: 394, 395ல், 5.55 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடந்ததால், வருவாய்த்துறை வாயிலாக தற்போது, சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது.
இந்த இடத்தில், சிலர் குடிசை வீடு கட்டி உள்ளனர்.
தடுப்பு வேலி அமைக்கும்போது வீடு கட்டியவர்கள், கல்லுக்குட்டையைச் சேர்ந்த எங்களுக்கு, அரசு இங்கு இடம் ஒதுக்கியது. அரசு வழங்கிய டோக்கன் உள்ளது' என, கடந்த 2008, 2011ம் ஆண்டு வழங்கியதாகக் கூறி, சில 'டோக்கன்'களை காட்டியுள்ளனர்.
வேறு சிலர், அரசு இடத்தில் 'பிளாட்' போட்டு, ஒரு சென்ட்க்கு, 5 லட்சம் ரூபாய் வீதம் விற்பனை செய்துள்ளனர். அப்படி சட்டவிரோதமாக வாங்கியவர்களில் சிலரும், டோக்கன் வைத்துள்ளனர்.
இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், 'வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்த்த பின், முடிவு எடுக்கப்படும்' எனக் கூறியுள்ளனர். தற்போது, அங்கு குடிசை அமைத்து வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், சுற்றி வேலி அமைக்கின்றனர்.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒரு இடத்தை காலி செய்து மாற்று இடம் வழங்கும்போது, டோக்கனுடன் உரிய அனுமதி ஆணை வழங்கப்படும்.
இவர்களிடம், டோக்கன் மட்டும் உள்ளதாக கூறுகின்றனர். அதில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களிடம் டோக்கன், ஆதார் எண் வைத்து மனு கேட்டுள்ளோம்.
இன்னும் சிலரிடம் விசாரித்தபோது, ஒரு தம்பதியிடம், 2 முதல் 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியதாகக் கூறினர். அரசு இடத்தை கூறுபோட்டு விற்ற அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். குடிசை அமைத்துள்ளவர்களுக்கு இடையூறு செய்யாமல் வேலி அமைக்கிறோம்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.