/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு
/
வண்டல், களிமண் எடுக்க விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 01, 2024 03:51 AM
செங்கல்பட்டு, : ஏரிகளில் வண்டல் மண், களிமண் இலவசமாக எடுக்க, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 356 ஏரிகளில் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக, விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு தாலுகாவில் - 11, செய்யூர் தாலுகாவில் - 110, திருக்கழுக்குன்றம் - 77, திருப்போரூர் தாலுகாவில் - 22, வண்டலுார் தாலுகாவில் இரண்டு என, மொத்தம் 222 ஏரிகளில் வண்டல் மண், களிமண் எடுக்கலாம்.
விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் பெற விண்ணப்பிக்கும் நபர், விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, களிமண் எடுக்க விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாய நிலத்தின் விஸ்தீரணம், குத்தகை உரிமம் பெற்று விவசாய பணி செய்தல், அதன் விவரம் மற்றும் வாகனத்தின் பதிவு எண் ஆகியவற்றுடன், வண்டல் மண், களிமண் அளவு ஆகிய தகவலுடன், தங்களது விண்ணப்பத்தை tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக, சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் நேர்முக உதவியாளர் வேளாண்மை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர், தாசில்தார் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
நஞ்சை நிலத்திற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 1 ஏக்கருக்கு 75 கன மீட்டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள். புஞ்சை நிலத்திற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, 1 ஏக்கருக்கு 90 கன மீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகள் எடுத்துக் கொள்ளலாம்.
மண்பாண்டம் தயாரித்தலுக்கு 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.