/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சுற்றுலா வாகன கட்டண வசூலில் முறைகேடு?
/
மாமல்லை சுற்றுலா வாகன கட்டண வசூலில் முறைகேடு?
ADDED : மே 25, 2024 10:20 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், சுற்றுலா வாகனங்கள் நுழைவுக்கட்டணத்திற்கு, பேரூராட்சி ஊழியர்கள் ரசீது அளிக்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை காண, பல்வேறு மாவட்டம் மற்று மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம், அவர்களின் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது.
ஆண்டுதோறும், ஏப்., 1ம் தேதி முதல், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கட்டணம் வசூலிக்க பொது ஏலம் நடத்தி, தனியாரிடம் உரிமம் வழங்கும். குத்தகைக்கு எடுதோர் ஊழியர்களை நியமித்து, கோவளம் சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் சாலை ஆகிய இடங்களில் கட்டணம் வசூலிப்பர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல், கடந்த 19ம் தேதி நடந்தது. இதன் காரணமாக, ஏப்., 16ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் கட்டண உரிம பொது ஏலம் நடத்தாமல் தவிர்த்தது. கடந்த நிதியாண்டின் தனியார் உரிம காலம், மார்ச் 31ம் தேதி முடிந்ததால், இரண்டு மாதங்களாக நிர்வாகமே கட்டணம் வசூலிக்கிறது.
கட்டணம் வசூலிக்க தனி ஊழியர்கள் இல்லாமல் குடிநீர் மற்றும் சுகாதார பிரிவில் உள்ள 13 ஊழியர்களே வசூலிக்கின்றனர். பல ஊழியர்கள், பயணியரிடம் கட்டணம் மட்டும் வசூலித்து, முறையாக ரசீது வழங்காமல் அடாவடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விடுமுறை நாட்களில் வாகனங்கள் குவியும் நிலையில், குறைவாக தொகை வசூலானதாக, நிர்வாகத்திடம் கணக்கு காண்பிப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் கட்டுப்பாடுகள் முடியும் வரை, இக்கட்டண வசூலை நிறுத்த பேரூராட்சி நிர்வாகம் கருதியதாகவும், இயக்குனரகம் வசூலிக்க கட்டாயப்படுத்தி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், நிர்வாக பணிகள் முடங்குவதால், கட்டண வசூலை நிறுத்துமாறு, இப்பகுதியினர் வலியுறுத்தியது குறித்து, கடந்த ஏப்., 26ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு, ஊழியர்கள் முறைகேடு செய்வதாகவும், பயணியரிடம் அடாவடி காட்டுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுலா வந்த கார் ஓட்டுனர் கூறியதாவது:
டிராவல்ஸ் நிறுவன காரில் பயணியரை அழைத்து வந்தேன். பூஞ்சேரியில் காரை நிறுத்தி, நுழைவுக்கட்டணம் வசூலித்தனர். ஆனால் ரசீது அளிக்கவில்லை.
டிராவல்ஸ் நிறுவனத்தில் அளிக்க ரசீது வேண்டும் என்று கேட்டும் அளிக்காமல், என்னை மிரட்டினர். அவ்வழியே சென்ற பல வாகனங்களிலும் இதே நிலை தான் நீடித்தது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.