/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் ஓட்டுப்பதிவு விறுவிறு புறக்கணிப்பை கைவிட்ட குன்னத்துார்
/
மாமல்லையில் ஓட்டுப்பதிவு விறுவிறு புறக்கணிப்பை கைவிட்ட குன்னத்துார்
மாமல்லையில் ஓட்டுப்பதிவு விறுவிறு புறக்கணிப்பை கைவிட்ட குன்னத்துார்
மாமல்லையில் ஓட்டுப்பதிவு விறுவிறு புறக்கணிப்பை கைவிட்ட குன்னத்துார்
ADDED : ஏப் 20, 2024 12:57 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சிப் பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் உள்ள ஓட்டுச்சாவடிகளில், காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவக்கப்பட்டது.
முன்னதாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்களை ஓட்டளிக்க செய்து, வி.வி.பேட்டில், ஓட்டளித்த சின்னம் ஒளிர்ந்ததை கவனிக்க செய்து, எண்ணிக்கையை சரிபார்த்து, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தினர்.
மாமல்லபுரத்தில் வசிக்கும் ராஜஸ்தான் மற்றும் குஜராத் நபர்கள், ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். முதியவர்களுக்கு, தபால் ஓட்டு வாய்ப்பளித்தும், ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தனர்.
மாமல்லபுரத்தில் இயங்கும், மனச்சிதைவு ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த 16 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களில் 14 பேர், நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், அவர்களாகவே ஓட்டளித்தனர்.
மாதிரி ஓட்டுச்சாவடி
மாமல்லபுரம், தேவனேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாதிரி ஓட்டுச்சாவடியாக செயல்பட்டது.
ஓட்டுச்சாவடி நுழைவாயிலில் வாழை மரங்கள் நட்டு, கட்டடப் பகுதி வரை, மாவிலை தோரணங்கள் அலங்கரித்தன.
கட்டடத்திற்குள் வெண்மை, நீல வண்ண பலுான்கள் தொங்கவிடப்பட்டன. தரையில் சிவப்பு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.
புறக்கணிப்பு கைவிடல்
சதுரங்கப்பட்டினம் அடுத்த குன்னத்துார் ஊராட்சிப் பகுதியில், வீட்டுமனை பட்டா பெயர் மாற்ற தடை விவகாரத்தால், அங்கு தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, பதாகை வைத்தனர்.
இதுதொடர்பாக, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ் ஆகியோர், அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அப்பகுதியினர் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு ஓட்டளித்தனர்.
முதல்முறை ஓட்டு
நாட்டின் முன்னேற்றமும், மக்களுக்கு நன்மையும், எந்த கட்சியின் ஆட்சியில் கிடைக்கும் என்பதை உணர்ந்து, அந்த கட்சிக்கு ஓட்டளித்தேன். முதல் ஓட்டை சரியான கட்சிக்கு அளித்த திருப்தியும் உள்ளது.
- இ.ஆதித்யா, 19,
மாமல்லபுரம்.

