sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லை கடலரிப்பு தடுப்பு திட்டம்...என்னாச்சு?:படகு, வலைகளை பாதுகாப்பதில் சிக்கல்

/

மாமல்லை கடலரிப்பு தடுப்பு திட்டம்...என்னாச்சு?:படகு, வலைகளை பாதுகாப்பதில் சிக்கல்

மாமல்லை கடலரிப்பு தடுப்பு திட்டம்...என்னாச்சு?:படகு, வலைகளை பாதுகாப்பதில் சிக்கல்

மாமல்லை கடலரிப்பு தடுப்பு திட்டம்...என்னாச்சு?:படகு, வலைகளை பாதுகாப்பதில் சிக்கல்


ADDED : செப் 13, 2024 01:03 AM

Google News

ADDED : செப் 13, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடற்கரை கோவில் மற்றும் மீனவர் வசிப்பிடம் ஒருங்கிணைந்த கடற்கரை பகுதியில், ஆண்டுதோறும் சில மாதங்கள் ஏற்படும் கடலரிப்பால், நிலப்பகுதியிலும் கடல்நீர் புகுகிறது. அதனால், மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க இடமின்றி, மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடற்கரை கோவில் மற்றும் அருகில் உள்ள பகுதி கடலரிப்பை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட, பிரத்யேக கடலரிப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதும், கேள்விக்குறியாகவே உள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களில், கடற்கரை கற்கோவில் குறிப்பிடத்தக்கது. இக்கோவிலை, யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா., சபையின் கல்வி, கலாசார அமைப்பு, சர்வதேச பாரம்பரிய நினைவுச்சின்னமாக, கடந்த 1984ல் அறிவித்தது. தமிழகத்தின் முதல் யுனெஸ்கோ அங்கீகார கலைச்சின்னம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சைவ, வைணவ சமய சன்னிதிகளுடன் உள்ள கற்கோவில், கடற்கரையில் அமைந்துள்ளது. கி.பி., 8ம் நுாற்றாண்டில், மாமல்லன் என்ற இரண்டாம் நரசிம்மவர்மன், பாறை கற்களால் கட்டியுள்ளார்.

இதை தொல்லியல் துறை பாதுகாத்து பராமரிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன், கடல்நீர் கோவில் வரை புகுந்து, அலைகள் தழுவி, அலைவாயில் கோவில் என்றும் அழைக்கப்பட்டது.

கடல் படிப்படியாக கோவிலை நெருங்கிய சூழலில், கடல் நாளடைவில் கோவிலையும் சூழும் அபாயம் ஏற்பட்டது. எனவே, கோவிலை பாதுகாக்க கருதிய தொல்லியல் துறை, கோவில் வளாகத்தின் வடபுறம் முதல் தென்புறம் வரை, கடற்கரையில் பாறை கற்கள் குவித்து, கடந்த 1984ல் பாதுகாப்பு தடுப்பு அரண் அமைத்தது.

அதனால், 2004ல் ஏற்பட்ட சுனாமி அலை தாக்குதலின்போது, இத்தடுப்பு அரண் காரணமாக, கோவில் பெரிய அளவில் பாதிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறமிருக்க, கோவில் வளாகம் அருகில், வடபுறத்தில் உள்ள மீனவ கடற்கரை பகுதியில், கடலரிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், கடலரிப்பு குறைவாகவே இருந்தத்.

கடலும், தற்போதையை இடத்திலிருந்து சற்று கிழக்கில் இருந்தது. கோவில் தடுப்பு அரண் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலரிப்பு படிப்படியாக அதிகரித்து, மீனவர்களின் குடிசைகள் கடலில் மூழ்கின.

கடல்நீர் நிலப்பகுதியில் புகுந்து, அடிக்கடி முன்னேறி வருகிறது. சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து, கடலின் இயல்பு தன்மை மாற்றமடைந்து, மேலும் அரிப்பு அதிகரிப்பதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலில் நீரோட்டத்தின் குறிப்பிட்ட திசை மாறும்போது, மே மாதம் முதல் சில மாதங்கள், கடல்நீர் கட்டட பகுதி வரை புகுந்து, அலை தாக்குகிறது.

கடற்கரை இன்றி, மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. இப்பகுதியில் தடுப்பு அமைத்து, அரிப்பை தடுக்குமாறு, அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தொல்லியல் கோவில் பகுதி கடற்கரை என்பதால், கோவில் பாதுகாப்பு நடைமுறைகளுடன் செயல்படுத்துவது அவசியம். மத்திய அரசின்கீழ் இயங்கும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், 2.2 கி.மீ., நீளத்திற்கு கடல் அரிப்பு இருப்பதாக கண்டறிந்து, அரிப்பை தடுக்க, மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசிடம் பரிந்துரைத்தது.

கடலரிப்பு தடுப்பு முன்னோடி திட்டமாக செயல்படுத்த அரசும் முடிவெடுத்த நிலையில், நிதி சிக்கல் காரணமாக கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட நிறுவனங்களும், இப்பகுதியில் ஏற்படும் கடலரிப்பு, கடற்பகுதி மண்ணின் தன்மை, நீரோட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்துள்ளன. ஆனால், அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, இதுவரை கேள்விக்குறியாகவே நீடிக்கிறது.

குடைவரை கோவில்


கடற்கரை கோவிலை ஒட்டி, வடபுறம் உள்ள பாறை குன்றில், மகிஷாசுரமர்த்தினி குடைவரை, துர்கா சிற்பத்துடன் உள்ளது. கற்கள் குவித்து, தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இதையும் பாதுகாக்க கருதாமல், கோவில் வளாகத்திற்கு வெளியே விடப்பட்டது. கடலரிப்பின் போது, சிற்ப குன்றை கடல் சூழ்வதும், பிறகு உள்வாங்குவதுமாக உள்ளது.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது:கடற்கரை கோவிலுக்காக கற்கள் குவித்த பின் தான், இங்கு கடலரிப்பு அதிகமாக உள்ளது. அரிப்பு சில மாதங்கள் தான் என்றாலும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவோ, வலைகளை பாதுகாப்பாக வைக்கவோ, கடற்கரை இல்லை.பழங்கால கோவிலான மகிஷாசுரமர்த்தினி குடைவரை பாதுகாப்பும் முக்கியம் என்பதால், அதற்கேற்ப திட்டமிட்டு தடுப்பு அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us