/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை ரவுண்டானா மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
/
மாமல்லை ரவுண்டானா மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
மாமல்லை ரவுண்டானா மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
மாமல்லை ரவுண்டானா மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரம்
ADDED : ஆக 12, 2024 03:51 AM

மாமல்லபுரம், : மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலை, கடந்த 2018ல் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. தற்போது, நான்குவழிப் பாதையாக மேம்படுத்தப்படுகிறது. இத்தடத்தில், பிற சாலைகள் இணையும் சந்திப்புகளில், தொலைதுார வாகனங்கள் இடையூறின்றி கடக்க, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி சந்திப்பில், முந்தைய சந்திப்பை தவிர்த்து சற்று வடக்கில், சென்னை, புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கடக்க, தனி மேம்பாலம் அமைக்கப் படுகிறது.
முந்தைய சந்திப்பில், அங்குள்ள அம்பாள் நகர், பெருமாளேரி பகுதியினர் கடக்க, பெட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நோக்கி செல்வோர், முந்தைய சந்திப்பு வழியே தான் தற்போதும் கடக்கின்றனர். புதுச்சேரி புதிய சாலை அமையும் நிலையில், செங்கல்பட்டுக்கு முந்தைய சந்திப்பு வழியே செல்வது தவிர்க்கப்பட்டு, மாற்றுத்தடம் அமைக்கப் படுகிறது.
அதாவது, முந்தைய சந்திப்பிலிருந்து சற்றுத்தொலைவு தெற்கில், ரவுண்டானா மேம்பாலத்துடன் புதிய சாலை அமைகிறது.
மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில், சென்னை, புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கடக்கும். செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள், புதுச்சேரி சாலையில் கடந்து, மேம்பாலத்தில் செல்லும்.
இவ்வாகனங்கள் செங்கல்பட்டு சாலையை அடைய, பாலத்திலிருந்து பெருமாளேரி வழியே, புதிய சாலையும் அமைக்கப்படுகிறது.
எண்ணுார் - மாமல்லபுரம் இடையே அமைக்கப்பட உள்ள சாலை, ரவுண்டானா பாலத்துடன் இணைக்கப்பட உள்ளது. எண்ணுார் சாலையின் குறிப்பிட்ட பகுதியை அமைக்கவுள்ள மாநில அரசின் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், எண்ணுார் தட வாகனங்கள், புதுச்சேரி சாலை பாலத்தில் எளிதாக கடப்பதற்கேற்ப திட்டமிட, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் பரிசீலித்தது.
அதன்படி, ரவுண்டானா பாலத்தை மட்டும் தற்போதைக்கு அமைக்க, ஆணையம் முடிவெடுத்தது. துாண்கள் மட்டும் அமைக்கப்பட்டு, பணிகள் முடங்கியிருந்த நிலையில், தற்போது பணிகள் துவக்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகின்றன.