/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் ஸ்தலசயனர் தெப்போற்சவம், தீர்த்தவாரி
/
மாமல்லபுரம் ஸ்தலசயனர் தெப்போற்சவம், தீர்த்தவாரி
ADDED : மார் 15, 2025 01:37 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், தெப்போற்சவம் மற்றும் தீர்த்தவாரி உற்சவம் கண்டார்.
மாமல்லபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது.
மாசி மாத பவுர்ணமி நாளான நேற்று முன்தினம், இங்கு தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு, கோவிலில் காலை ஸ்தலசயன பெருமாள், தேவியர் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடத்தினர். இரவு, கொக்கு பறவையை கிருஷ்ணர் வதம் செய்யும் பகாசுர திருக்கோல அலங்காரத்தில், தேவியருடன் கோவிலிலிருந்து புறப்பட்டு, புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளத்தில் எழுந்தருளினார்.
தீபாராதனையைத் தொடர்ந்து, மூன்று சுற்றுகள் வலம் வந்து, பின் வீதியுலா சென்றார்.
நேற்று காலை, கருட வாகனத்தில் எழுந்தருளி, கடற்கரையை அடைந்தார். பூதத்தாழ்வார் உடன் சென்றார்.
திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து சக்கரத்தாழ்வார், 10:30 மணிக்கு வங்க கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டார். பக்தர்களும் திரண்டு, கடலில் நீராடினர். இதேபோல், தொல்லியல் வளாக, ஆதிவராக பெருமாளும் தீர்த்தவாரி கண்டார்.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகத்தினர், உற்சவம் காண திரண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
* சதுரங்கப்பட்டினம்
சதுரங்கப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற, மலைமண்டல பெருமாள் எனப்படும் வரதராஜ பெருமாள், சுற்றுப்புற பகுதி சுவாமியருடன், இப்பகுதி கடற்கரையில் எழுந்தருளினார்.
திருமஞ்சன வழிபாட்டைத் தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் கடலில் புனித நீராடி, சுவாமி தீர்த்தவாரி உற்சவம் கண்டார்.
பக்தர்கள் கடலில் நீராடி, சுவாமியை வழிபட்டனர். இதேபோல், திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கடற்கரைக்குச் சென்று, சக்கரத்தாழ்வார் கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டார்.