/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலைவனமாக மாறிய ஓதியூர் ஏரி பறந்து சென்ற வலசை பறவைகள்
/
பாலைவனமாக மாறிய ஓதியூர் ஏரி பறந்து சென்ற வலசை பறவைகள்
பாலைவனமாக மாறிய ஓதியூர் ஏரி பறந்து சென்ற வலசை பறவைகள்
பாலைவனமாக மாறிய ஓதியூர் ஏரி பறந்து சென்ற வலசை பறவைகள்
ADDED : ஏப் 11, 2024 11:47 PM

செய்யூர்:செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில், 275 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஓதியூர் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரிகளில் இருந்து, வெளியேறும் உபரிநீர், ஓதியூர் ஏரி வழியாகக் கடலில் கலக்கிறது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்., மாதம் வரை சீனா, ரஷ்யா, மலேஷியா, இலங்கை போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த பறவைகள், இந்த ஏரிக்கு வலசை வந்து, இரை தேடி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்து, மீண்டும் அந்தந்த நாடுகளுக்கே செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் வனத்துறையினர் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் செங்கால் நாரை, ஊசிவால் வாத்து, பூநாரை, நெடுங்கால் உள்ளான், பெரிய கோட்டான் உள்ளிட்ட 70 வகையான, 15,000க்கும் மேற்பட்ட பறவைகள் வலசை வந்ததாக கணக்கெடுக்கப்பட்டது.
அதிகபட்சமாக, ஊசிவால் வாத்து - 6,000, செங்கால் நாரை - 700, பூநாரை - 550, நெடுங்கால் உள்ளான் - 350, சின்ன கோட்டான் - 300, பெரிய கோட்டான் - 300 மற்றும் பிற பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஓதியூர் ஏரியில் படிப்படியாக தண்ணீர் குறைந்து, தற்போது வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் இல்லாததால், வலசை பறவைகள் வேறு இடங்களுக்கு சென்றன.
கடந்த இரண்டு மாதங்களாக வலசை பறவைகளால் களைகட்டிய ஓதியூர் ஏரி, தற்போது வரண்டு போய் பாலைவனம் போல காட்சியளிக்கிறது.

