/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மக்கள் துார்வாரிய நெமிலிச்சேரி ஏரி கழிவுநீர், ஆகாயதாமரையால் நாசம்
/
மக்கள் துார்வாரிய நெமிலிச்சேரி ஏரி கழிவுநீர், ஆகாயதாமரையால் நாசம்
மக்கள் துார்வாரிய நெமிலிச்சேரி ஏரி கழிவுநீர், ஆகாயதாமரையால் நாசம்
மக்கள் துார்வாரிய நெமிலிச்சேரி ஏரி கழிவுநீர், ஆகாயதாமரையால் நாசம்
ADDED : ஜூலை 16, 2024 05:10 AM

குரோம்பேட்டை : குரோம்பேட்டையில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நெமிலிச்சேரி ஏரி உள்ளது. 37 ஏக்கர் பரப்பு உடைய இந்த ஏரியின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன.
நீர்நிலைகளை சீரமைக்க, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து, 'தினமலர்' நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் கழிவுகளால் மூடப்பட்டிருந்த இந்த ஏரியை, 2019ல் ஏரி பாதுகாப்பு குழு துார்வாரியது.
அப்போது, 3,000 லோடுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கலந்த மண்ணை எடுத்து குவித்தனர். பின், பொதுப்பணித் துறை வாயிலாக 'டெண்டர்' விடப்பட்டு, 15 முதல் 20 அடி வரை துார்வாரப்பட்டது.
அப்போது பெய்த மழையால், ஏரி நிரம்பியது. இது, சுற்றுப்புற பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 2021 மற்றும் 2023ல், ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது.
பொதுமக்களின் முயற்சியால் துார்வாரி ஆழப்படுத்தப்பட்ட இந்த ஏரியை, பொதுப்பணித் துறை பராமரிக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
இதனால், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நெமிலிச்சேரியில் கலந்து, கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது.
மற்றொரு புறம், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது. அதேபோல், முழுதும் ஆகாயத்தாமரை வளர்ந்து மூடிவிட்டது. தற்போது ஏரி, கழிவுநீர் தேக்கமாக மாறி நாசமடைந்துள்ளது.
பொதுப்பணி துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, நெமிலிச்சேரியை சுத்தப்படுத்தி, முறையாக பராமரிக்க முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.