/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொத்தேரி சந்திப்பில் புதிய சிக்னல் அமைப்பு
/
பொத்தேரி சந்திப்பில் புதிய சிக்னல் அமைப்பு
ADDED : மே 03, 2024 01:02 AM

மறைமலை நகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தன.
அப்போது, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட சாலை சந்திப்புகளில் இருந்த சிக்னல்களின் மின் இணைப்புகள் அகற்றப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது.
இதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த பகுதியில் பெரும்பாலான இடங்களில் சிக்னல்கள் செயல்படவில்லை.
இதனால், சாலையை கடக்கும் வாகனங்கள், பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். பொத்தேரி சந்திப்பில், தாம்பரம் செல்லும் மார்கத்தில், கடந்த ஆண்டு கனரக வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
அதுமட்டுமின்றி, பலர் விபத்துகளில் சிக்கி வந்தனர். மீண்டும் அப்பகுதியில் சிக்னல் அமைக்கக்கோரி, இப்பகுதியை சேர்ந்த அனைத்து கட்சிகள், மகளிர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.
நம் நாளிதழிலும், விபத்துகளை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும் என, செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு இறுதியில், இந்த பகுதியில் சிக்னல் அமைக்கும் பணிகள் துவங்கி, தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்து, சிக்னல்கள் இயங்க துவங்கி உள்ளன.