/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற ஓ.எம்.ஆர்., அணுகுசாலை
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற ஓ.எம்.ஆர்., அணுகுசாலை
ADDED : மார் 26, 2024 11:21 PM

துரைப்பாக்கம்:சென்னையின் முக்கிய ஆறு வழி சாலையாக, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. இங்கு, 20 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் வழித்தட கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இதற்காக, சாலையின் இருவழி பாதையை அடைத்து, அணுகு சாலை இடையே உள்ள தடுப்பை அகற்றி, சாலை விரிவாக்கம்செய்யப்பட்டது.
ஆனால், அணுகு சாலை சிமென்ட் கற்களால் பதித்த பாதையானதால், ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதே பாதையில், மழைநீர் வடிகால், கேபிள் பதிக்க தனிப்பாதை, குடிநீர் குழாய் பதிப்பு என, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக, 50, 100 மீ., இடைவெளியில் இயந்திர நுழைவுவாயில் அமைத்து, மேலே சிலாப் போட்டு மூடப்பட்டு உள்ளது. அதில், கனரக வாகனங்கள் ஏறி செல்வதால், உள்வாங்கி விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இந்த சாலை உள்ளது. மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால், சாலை சீரமைப்பை மெட்ரோ நிர்வாகத்திடம்ஒப்படைக்கப்பட்டுஉள்ளது.
ஆனால், மெட்ரோ நிர்வாகம் சாலை சீரமைப்பு பணிகளை முறையாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இரு துறைகளும் ஒருங்கிணைந்து, சாலையை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து அப்பகுதியில் பயணிப்போர் கூறியதாவது:
துரைப்பாக்கம் ஓ.எம்.ஆர்., சாலையில் ஜங்ஷன் பகுதியில், சிக்னல் கோளாறு காரணமாக வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது.
இது கூட பரவாயில்லை. தற்போது, இங்கு மெட்ரோ பணி நடப்பதால் ஓ.எம்.ஆர்., அணுகுசாலையை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், அணுகுசாலை பல்வேறு பணிகளுக்காக ஆங்காங்கேதோண்டப்பட்டும் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால், பெண்கள், முதியோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.

