/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல் கொள்முதல் நிலையம் படாளத்தில் புதிதாக திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் படாளத்தில் புதிதாக திறப்பு
ADDED : செப் 07, 2024 07:37 AM

மதுராந்தகம் : செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி நெல் சாகுபடியில், 31,389.80 ஏக்கர் பரப்பளவில், நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
மதுராந்தகம் அடுத்த படாளம், புளிப்பரக்கோவில், கிணார், பூதுார், ஈசூர், எல்.என்.புரம், ஏர்பாக்கம் ஆகிய பகுதிகளில், நெல் அறுவடை செய்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், 30 நாட்களுக்கும் மேலாக, அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யும் இடத்தில் கொட்டி வைத்து, விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர்.
மதுராந்தகம் வட்டாரத்தில், கிணார், படாளம் பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் தொகையானது, நெல் ஒரு குவிண்டாலுக்கு ஆதார விலையாக 2,320 ரூபாயும், சன்ன ரகத்துக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக 130 ரூபாய் என, மொத்தம் 2,450 ரூபாய் வழங்கப்படுகிறது.அதேபோல், பொது ரகத்துக்கு, குவிண்டாலுக்கு 2,302 ரூபாயும், தமிழக அரசின் ஊக்கத்தொகை 103 ரூபாய் சேர்த்து, மொத்தம் 2,405 ரூபாய், செப்., 1ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
இதனால், படாளம், கிணார் உள்ளிட்ட பகுதிகளில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனை அடுத்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன், படாளம், கிணார் உள்ளிட்ட பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
படாளத்தில், பதிவு செய்த 10 விவசாயிகளிடமிருந்து, இதுவரை சன்ன ரகம் 40 கிலோ எடை கொண்ட 2,056 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.