ADDED : மார் 02, 2025 11:28 PM
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 47, தி.மு.க., பிரமுகர்.
இவர், 2019, பிப்., 11ம் தேதி, பிள்ளைபாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்த போது, கூலிப்டையினர் வாயிலாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டடு சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வளர்புரம் ஊராட்சி தலைவரும், பா.ஜ., பட்டியல் அணி மாநில பொருளாளருமான பி.பி.ஜி.டி. சங்கர், 2023ம் ஆண்டு, பூந்தமல்லி அருகே, நசரத்பேட்டை சிக்னல் அருகே காரில் சென்ற போது, மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியும், ஓட ஓட துரத்தியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மற்றொரு குற்றவாளியாக ரவுடி விஷ்வா, அதே ஆண்டு, ஸ்ரீபெரும்புதுார் அருகே, சோகண்டு மாந்தோப்பு பகுதியில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஆண்டு, காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த பிப்., 28ம் தேதி நடந்த வழக்கு விசாரணையில், முதன்மை குற்றவாளியான பிள்ளைப்பாக்கம் ஊராட்சி தலைவி காயத்ரியின் கணவர் வெங்கடேசன் ஆஜராகவில்லை.
இதனால், அவர் மீது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வெங்கடேசனை, நேற்று முன்தினம் கைது செய்து, காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.