/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேரூராட்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மாமல்லையில் தீர்மானம் நிறைவேற்றம்
/
பேரூராட்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மாமல்லையில் தீர்மானம் நிறைவேற்றம்
பேரூராட்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மாமல்லையில் தீர்மானம் நிறைவேற்றம்
பேரூராட்சி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மாமல்லையில் தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : ஜூலை 31, 2024 10:15 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம், கடந்த 2014ல் மற்றும் மன்ற கூடம் 2016ல் கட்டப்பட்டது. பேரூராட்சி தலைவர் அறை மற்றும் மன்ற கூடம் ஆகியவற்றை, பொதுநிதி 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில், தற்போது தான் புதுப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, செயல் அலுவலர் அறை மற்றும் அலுவலக அறைகள் ஆகியவற்றை, தற்போது பொதுநிதியில் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தலைவர் வளர்மதி தலைமையில், நேற்று நடந்த கூட்டத்தில், இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு ராஜ வீதியில் உள்ள பழைய நீரேற்று நிலைய கிணற்றை துார் வாருவது, மீன் மார்க்கெட் உட்புறம் உள்ள 48 கடைகளை ஏலம் விடுவது, குடிநீர் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களின் ஊதியத்தை, 3,000 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்துவது, ஒப்பந்த துாய்மைப் பணியாளர்களின் ஊதியத்தை, கலெக்டர் அறிவுறுத்தலின்படி சந்தை மதிப்பிற்கு உயர்த்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், குடிநீர், பாதாள சாக்கடை ஆகிய பிரிவுகளில், தலா ஒரு ஒப்பந்த ஊழியர் நியமிப்பது, சாலையில் இடையூறாக உலவும் மாடுகளை பிடிப்பது, நாய்களை பிடித்து கருத்தடை செய்வது, குடிநீர், வடிகால்வாய், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
வார்டு கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது:
வார்டு உறுப்பினர்கள், கூட்ட அரங்கில் முறையாக கூடவில்லை. செயல் அலுவலரும் பங்கேற்கவில்லை. அலுவலக அறையில் சிலர், கூடத்தில் சிலர் என்று பேசிவிட்டு, பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு கலைந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.