/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிவேக வாகனங்கள் இ.சி.ஆரில் அபராதம்
/
அதிவேக வாகனங்கள் இ.சி.ஆரில் அபராதம்
ADDED : ஆக 09, 2024 01:33 AM

மாமல்லபுரம்:சென்னை - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலையும், தொடர்ந்து மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலையும் உள்ளது. சென்னையிலிருந்து, மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியே, வாகனங்கள் ஏராளமாக கடக்கின்றன. அதிவேக வாகனங்களால் அடிக்கடி விபத்து, உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
இந்நிலையில், அதிவேக வாகனங்களை கண்காணிக்க, மாமல்லபுரம், கிருஷ்ணன்காரணை, திருவிடந்தை ஆகிய பகுதிகளில், சிசிடிவி கேமராக்களை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் அமைத்தது.
வாகனங்கள் 100 கி.மீ., வேகத்தில் செல்ல அனுமதி உண்டு. அதைவிட கூடுதல் வேகத்தில் சென்றால், கேமராவில் வாகனத்தின் பதிவெண் பதியும். அவ்வாறு பதிவான வாகனங்கள் குறித்து, சாலை மேம்பாட்டு நிறுவனம், செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் அளிக்கும்.
துவக்கத்தில், அதிவேக வாகனங்கள் பதிவாகியும், அபராதம் தவிர்க்கப்பட்டது. ஆனால், அதிக வாகனங்கள் வேகமாக செல்லும் நிலையில், தற்போது அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாமல்லபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வம் கூறியதாவது:
100 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள், சிசிடிவி'யில் பதிவாகின்றன. அந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் அதிக வாகனங்கள் வேகமாக சென்று பதிவாகின்றன. மாதத்திற்கு, சராசரியாக 7,000 முதல் 9,000 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.