/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
* தொடரும் திருட்டு, கொள்ளையால் செங்கை மக்கள்... அச்சம் * முதியோர், பூட்டிய வீடுகளை குறிவைத்து அட்டகாசம்
/
* தொடரும் திருட்டு, கொள்ளையால் செங்கை மக்கள்... அச்சம் * முதியோர், பூட்டிய வீடுகளை குறிவைத்து அட்டகாசம்
* தொடரும் திருட்டு, கொள்ளையால் செங்கை மக்கள்... அச்சம் * முதியோர், பூட்டிய வீடுகளை குறிவைத்து அட்டகாசம்
* தொடரும் திருட்டு, கொள்ளையால் செங்கை மக்கள்... அச்சம் * முதியோர், பூட்டிய வீடுகளை குறிவைத்து அட்டகாசம்
ADDED : ஜூலை 20, 2025 10:32 PM

மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் வேடிக்கை பார்க்காமல், தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், திம்மாவரம், ஆத்துார் ஆகிய பகுதிகள், நீண்ட காலமாக ரவுடிகளின் புகலிடமாக உள்ளன.
இந்த பகுதிகளில், சமீப காலமாக வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, கத்தியால் வெட்டி வழிப்பறி, பணம் வைத்திருப்போரை திசை திருப்பி திருட்டு என, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல், அந்த வாகனங்களை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர்கிறது.
குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்கள், இரவு பணி முடிந்து செல்வோரை குறி வைத்து, இந்த கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இவர்கள் பெரும்பாலும், வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், போலீசார் எளிதாக கண்டுபிடிக்க முடிவதில்லை.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என்பது, நடுத்தர குடும்பங்களின் கனவு. சேமிப்பு என்று கருதியே, தங்களின் நீண்ட கால உழைப்பை, தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களால், அவர்களின் வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிடுகிறது.
அதேபோல, பூட்டிய வீடுகளை குறி வைத்து, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே, தொடரும் குற்றச் செயல்களுக்கு காரணம். போலீசார் முறையாக ரோந்து செல்வதில்லை. சில போலீசார் குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ளதும் சிக்கலுக்கு காரணம்.
கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடராத வகையில், தடுப்பு நடவடிக்கைகளில், போலீஸ் உயர் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
செங்கை மற்றும் புறநகர் பகுதிகளில், வெளியூர்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளோம். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
வீடுகளை வாடகைக்கு விடும்போது, உரிய அடையாள அட்டையை ஆய்வு செய்து, அதன்பின் வாடகைக்கு விடவும் அறிவுறுத்தி உள்ளோம். ஆனால், பல வீடுகளின் உரிமையாளர்கள் அதிக வாடகை கிடைப்பதால், வாடகைதாரரைப் பற்றி முழுமையாக விசாரிக்காமல், வாடகைக்கு விட்டு விடுகின்றனர்.
கொரோனா காலத்திற்குப்பின், மறைமலைநகர், ஒரகடம், மகேந்திரா சிட்டி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் பல, தங்களின் வேலை நேரத்தை மாற்றியமைத்துள்ளன.
இதன் காரணமாக, நள்ளிரவு நேரங்களில் கூட இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் நடந்து செல்லும்போது, மொபைல்போன் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.