/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டா வழங்காமல் புறக்கணிப்பு 50 ஆண்டுகளாக போராடும் மக்கள்
/
பட்டா வழங்காமல் புறக்கணிப்பு 50 ஆண்டுகளாக போராடும் மக்கள்
பட்டா வழங்காமல் புறக்கணிப்பு 50 ஆண்டுகளாக போராடும் மக்கள்
பட்டா வழங்காமல் புறக்கணிப்பு 50 ஆண்டுகளாக போராடும் மக்கள்
ADDED : ஆக 12, 2024 11:51 PM
திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அருங்குன்றம் ஊராட்சியில், சர்வே எண் 196 மற்றும் 197ல், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 64 இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன.
கடந்த 1994ம் ஆண்டு, 30 குடும்பங்களுக்கு நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், இப்பட்டா இதுவரை கிராம அடங்கல் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்த நிபந்தனை பட்டா இருந்தாலும், மின் இணைப்பு, தொகுப்பு வீடு போன்ற எந்த சலுகையும் பெறமுடியாது.
எனவே, அப்பகுதிவாசிகள், கிராம அடங்கல் கணக்கில் சேர்த்து முறையான கிராம நத்தம் பட்டா வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனால், அவர்களுக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு, கடந்த 2021ம் ஆண்டு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. ஆனாலும், அந்த கணக்கெடுப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்போரூரில் நடந்த ஜமாபந்தியிலும், சப் - கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அதிலும், எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், இப்பகுதி இருளர் மக்களுக்கு, வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
அதேபோல், அதே கிராமத்தில் உள்ள குன்னக்காடு தெருவில், நீர்ப்பிடிப்பு பகுதியில், 12 இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அவர்களுக்கு மாற்று இடமாக, ஆட்சேபனையற்ற தோப்பு புறம்போக்கில் இடம் ஒதுக்கி தர வேண்டி, ஊராட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, துறை சார்ந்து மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட நிபந்தனை பட்டாவை கிராம கணக்கில் ஏற்றி, முறையான நத்தம் பட்டா வழங்கவும், நீர்ப்பிடிப்பு பகுதியில் வசிக்கும் 12 குடும்பங்களுக்கு, உரிய மாற்று இடம் ஒதுக்கி வீட்டுமனை பட்டா வழங்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இருளர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.