/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நான்காம் பாதையில் ரயில் இயக்க அனுமதி சேவையை 33 சதவீதம் அதிகரிக்க திட்டம்
/
நான்காம் பாதையில் ரயில் இயக்க அனுமதி சேவையை 33 சதவீதம் அதிகரிக்க திட்டம்
நான்காம் பாதையில் ரயில் இயக்க அனுமதி சேவையை 33 சதவீதம் அதிகரிக்க திட்டம்
நான்காம் பாதையில் ரயில் இயக்க அனுமதி சேவையை 33 சதவீதம் அதிகரிக்க திட்டம்
ADDED : மார் 10, 2025 11:31 PM
சென்னை, கடற்கரை - எழும்பூர் நான்காவது புதிய பாதையில், ரயில் இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், இந்த தடத்தில், 33 சதவீதம் ரயில்களின் சேவை அதிகரிக்க முடியும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் -- கடற்கரை இடையே, தற்போது இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தடத்தில் கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், சென்னை எழும்பூர் -- கடற்கரை இடையே, 4 கி.மீ., துாரத்துக்கு நான்காவது புதிய ரயில்பாதை பணி, 274.20 கோடி ரூபாய் மதிப்பில், 2023 ஆகஸ்டில் துவங்கியது.
தற்போது பணிகள் முடிந்ததால், கடற்கரை -- சென்னை எழும்பூர் வரை, நான்காவது பாதையில் அதிவேக ரயிலை இயக்கி தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி, நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
ரயில் பாதை, சிக்னல்தொழில்நுட்பம், கோட்டை, பார்க் டவுன் ஆகிய ரயில் நிலையங்களிலும், பயணியர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் சோதனை நடத்தினார். சோதனை திருப்தியாக இருந்ததால், புதிய பாதையில் ரயில் இயக்க, ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
எழும்பூர் - கடற்கரை நான்காவது புதிய பாதை முக்கியமானது. இந்த புதிய பாதையில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், இந்த தடத்தில் ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த பாதையில் படிப் படியாக ரயில்களின் சேவை அதிகரிக்கப்படும். முதலில் ரயில்கள் தாமதமாக செல்வது குறைக்கப்படும்.
செங்கல்பட்டு - கடற்கரை தடத்தில், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இதுதவிர, வெளிமாவட்டங்களில் இருந்து எழும்பூர், கடற்கரை வழியாக, 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் வெளிமாநிலங்களுக்கு செல்கின்றன.
தற்போது, கூடுதலாக ஒரு ரயில் பாதை கிடைத்துள்ளதால், 33 சதவீதம் ரயில்களின் சேவையை அதிகரித்து இயக்க முடியும்.
எனவே, பயணியர் தேவையை கருதி கூடுதல் அல்லது புதிய ரயில்களின் சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

