/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடைக்கப்படாத வெடால் ஏரி மதகு நெல் அறுவடை செய்வதில் சிக்கல்
/
அடைக்கப்படாத வெடால் ஏரி மதகு நெல் அறுவடை செய்வதில் சிக்கல்
அடைக்கப்படாத வெடால் ஏரி மதகு நெல் அறுவடை செய்வதில் சிக்கல்
அடைக்கப்படாத வெடால் ஏரி மதகு நெல் அறுவடை செய்வதில் சிக்கல்
ADDED : பிப் 25, 2025 11:57 PM

செய்யூர்,செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி நீர் வாயிலாக, 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம், பாசன வசதி பெறுகிறது.
சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர், தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது.
ஆனால், ஏரியின் மதகு முறையாக அடைக்கப்படாமல் உள்ளதால், தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது. இந்த தண்ணீர், வயல்களில் தேங்குவதால், நெல் அறுவடை இயந்திரம் வாயிலாக அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது:
சம்பா பருவத்தில் 10 ஏக்கர் நெல் பயிரிட்டு உள்ளேன். ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 ரூபாய் வரை செலவு செய்து உள்ளேன்.
ஏரி மதகு அடைக்கப்படாமல் உள்ளதால், கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
இதனால், வயல்வெளியில் தண்ணீர் தேங்கி, 'டயர்' வாயிலாக இயங்கும் நெல் அறுவடை இயந்திரத்தால் அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
'டயர்' வாயிலாக இயங்கும் நெல் அறுவடை இயந்திரத்தால் அறுவடை செய்தால், 1 மணி நேரத்திற்கு 2,000 ரூபாய் மட்டுமே கட்டணம்.
கால்நடைகளுக்கும் தீவனமாக வைக்கோல் கிடைக்கும். ஆனால், வயல்வெளியில் தண்ணீர் தேங்குவதால், 'பெல்ட்' வாயிலாக இயங்கும் நெல் அறுவடை இயந்திரத்தால் அறுவடை செய்ய வேண்டும். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு 3,000 ரூபாய் செலவாகும். வைக்கோல் சேதமடைந்து, பயன்படுத்த முடியாதபடி நாசமாகும்.
அடுத்த பருவத்திற்கு பயிர் செய்யும் அளவிற்கு ஏரியில் தண்ணீர் உள்ளது.
தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் தற்போது வெளியேறுவதால், அடுத்த பருவம் பயிர் செய்வது கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளைக் கொண்டு, ஏரி மதகை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.