/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் இடத்தில் பாதை அமைக்க மனைப்பிரிவுக்கு தடை
/
கோவில் இடத்தில் பாதை அமைக்க மனைப்பிரிவுக்கு தடை
ADDED : மே 10, 2024 01:37 AM
திருப்போரூர், திருப்போரூர் அடுத்த இள்ளலுார் ஊராட்சி, செங்காடு கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமையான சங்கோதியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் பின்புறம், தனிநபர் நிலம் மற்றும் மனைப்பிரிவு உள்ளது.
இந்த நிலத்துக்கு அணுகு பாதை தேவைக்காக, அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், சங்கோதியம்மன் கோவிலை அகற்றி, அருகில் தனிநபரில் சொந்த செலவில் அதே கோவிலை அமைப்பதாகவும், சார்பு ஆட்சியர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
எனினும், இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மார்ச் மாதம் போராட்டம் செய்தனர்.
அப்போது, எஸ்.எல்.ஆர்., எனப்படும், சென்ட்டில்மென்ட் நில பதிவேட்டிலும், யு.டி.ஆர்., எனப்படும் நிலவரித் திட்டத்திலும், கிராம வரைபடத்திலும் கோவில் என உள்ளது.
ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள 1996ம் ஆண்டு, நத்தம் நிலவரித் திட்டத்தில், அதிகாரிகளின் தவறுதலால் பாதை என மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தை வைத்து, தனிநபர் ஒருவர் தி.மு.க., அமைச்சர் ஆதரவில், சொந்த செலவில் கோவிலை மாற்று இடத்தில் அமைத்து, அங்கு அணுகு பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
முறையான வழியில்லாத மனைப்பிரிவுக்கு, டி.டி.சி.பி., அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, கோவில் தர்மகர்த்தா தரப்பில், வருவாய் ஆவணங்களை சரியாக பரிசீலனை செய்யாமல் மனைப்பிரிவு அனுமதி கொடுக்கப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட மனைப்பிரிவு அனுமதிக்கு, வரும் ஜூன் 20ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது.