/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நலச்சங்கம் நட்ட மரக்கன்றுகள் அகற்றம்
/
நலச்சங்கம் நட்ட மரக்கன்றுகள் அகற்றம்
ADDED : ஆக 29, 2024 10:06 PM
பெருங்களத்துார்:பெருங்களத்துார் மேம்பால திட்டத்தில், ரயில்வே தண்டவாளத்தை கடந்து, சீனிவாசா நகர் வழியாக இறங்கும் பாதை திறக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது.
இந்த இடத்தில், பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், மேம்பாலத்தை ஒட்டி, சுதந்திர தினத்தன்று 21 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரக்கன்றுகள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அகற்றப்பட்டன. இதற்கு, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெருங்களத்துார் - பீர்க்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
மரக்கன்றுகளை நட, நெடுஞ்சாலைத் துறையினர் அறிவுறுத்தினர். அந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் முன், 50க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன.
இதை ஈடும் செய்யும் வகையிலும், 21 மரக்கன்றுகளை நட்டோம். இதற்காக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாநகராட்சியில் கடிதம் கொடுத்து, ஒப்புதல் ரசீதும் பெறப்பட்டது.
இந்நிலையில், மரக்கன்றுகளை அகற்றியுள்ளனர். சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை தேவை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை. அதனால், அவற்றை அகற்றினோம்' என்றனர்.

