/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டுகோள்
/
எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டுகோள்
ADDED : மார் 09, 2025 11:38 PM
மாமல்லபுரம், மாமல்லபுரம் நகராட்சியில், மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகள் உள்ளன.
ஒவ்வொரு பகுதியிலும், இறந்தவர்களை புதைக்க, எரியூட்ட தனித்தனி மயானம் உள்ளன. மாமல்லபுரம் நகர்ப் பகுதிதான், பிரதான இடமாக உள்ளது.
இங்குள்ள கோவளம் சாலையில், வசிப்பிடம், பிரபல தனியார் கடற்கரை விடுதி உள்ளிட்டவற்றின் அருகில், மயானம் உள்ளது.
இறந்தவர்களை, விறகில் நீண்டநேரம் எரியூட்டுவதால், கரும்புகை பரவி, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதை தவிர்க்க, முந்தைய பேரூராட்சி நிர்வாகம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ், வெண்புருஷம் மயானத்தில், எரிவாயு தகனமேடை அமைக்க முடிவெடுத்தது.
அப்பகுதி மீனவர்கள், மீனவ பகுதி அருகில், மயானம் உள்ளதாகவும், அனைத்து பகுதி சடலங்களையும் அங்கு எரியூட்டினால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது வரை எரிவாயு தகனமேடை அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து, மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதை அமைக்க, நகராட்சி நிர்வாகம் முயற்சிக்குமாறு, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.