/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கம் ஊராட்சி தரம் உயர்த்த கோரிக்கை
/
ஊரப்பாக்கம் ஊராட்சி தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : மார் 09, 2025 11:35 PM
ஊரப்பாக்கம்,வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
அதிகரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில், வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி 692.92 ஹெக்டேர் பரப்பில் உள்ளது.
கடந்த 2024 மக்களவை தேர்தல்படி, இங்கு 15 வார்டுகளில், 11,126 வீடுகளில், 66,377 நபர்கள் வசிக்கின்றனர்.
ஊரப்பாக்கம் அடுத்து ஊனமாஞ்சேரி ஊராட்சி 59.76 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இங்கு 9 வார்டுகளில் 5,642 நபர்கள் வசிக்கின்றனர்.
இவ்விரு ஊராட்சிகளையும் இணைத்து, புதிய பேரூராட்சியாக ஊரப்பாக்கத்தை தரம் உயர்த்திட வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துஉள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
பரப்பில் பெரிய ஊராட்சி இது. தவிர, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்களை இணைக்கும் ஜி.எஸ்.டி., தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே அமைந்துள்ளதால், புதிதாக வீடுகட்டி குடியேறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.
அடிப்படை வசதி
ஆனால், ஆரம்ப சுகாதார மையம், விளையாட்டு மைதானங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், சுகாதார மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
ஊராட்சி வளர்ச்சிக்காக அரசு சார்பில் உரிய நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனால், அடிப்படை வசதிகளில் மிகவும் பின்தங்கி உள்ளது.
எனவே, அருகிலுள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியை இணைத்து, வரி வருவாய் மற்றும் அரசின் வாயிலாக ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதியை அதிகரிக்கும்படி, ஊரப்பாக்கத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.