sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் தொடர்கதை மின் விளக்கு அமைக்க ரூ.16 கோடி பரிந்துரை

/

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் தொடர்கதை மின் விளக்கு அமைக்க ரூ.16 கோடி பரிந்துரை

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் தொடர்கதை மின் விளக்கு அமைக்க ரூ.16 கோடி பரிந்துரை

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் தொடர்கதை மின் விளக்கு அமைக்க ரூ.16 கோடி பரிந்துரை


ADDED : மார் 01, 2025 11:37 PM

Google News

ADDED : மார் 01, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு :சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வண்டலுார் - அச்சிறுபாக்கம் வரை, புதிதாக உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க, 16 கோடி ரூபாய் நிதி கேட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வண்டலுார், பரனுார், செங்கல்பட்டு புறவழிச்சாலை, இருங்குன்றப்பள்ளி, மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு ஆகிய பகுதிகளில், மேம்பாலங்கள் மற்றும் சாலை குறுக்கிடும் பகுதிகள் உள்ளன.

இந்த மேம்பாலங்கள் மற்றும் சாலை குறுக்கிடும் பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், மகேந்திரா சிட்டி, புக்கத்துறை, படாளம் கூட்டுச்சாலை.

மேலவலம்பேட்டை, கருங்குழி, அய்யனார்கோவில், ஊனமலை, பாக்கம், சோத்துப்பாக்கம் ஆகிய இடங்களில், சாலை குறுக்கிடும் பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில், சாலை பராமரிப்பிற்காக, செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் ஆகிய இடங்களில், சுங்கச்சாவடி அமைத்து, வாகன ஓட்டிகளிடம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்க கட்டணம் வசூலிக்கிறது.

ஆனால், சாலை மற்றும் மின் விளக்குகளை முறையாக பராமரிப்பதில்லை.

பல இடங்களில் சாலை மற்றும் மேம்பாலங்களில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரியாமல் உள்ளன.

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலங்கள் மற்றும் சாலை குறுக்கிடும் பகுதிகளில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதனால், சாலை விபத்துகள் மட்டுமின்றி, வழிப்பறி சம்பவங்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களும் நடக்கின்றன. வாகன ஓட்டிகள் தனியாக செல்லும் போது, மர்ம நபர்கள் வழிமறித்து மொபைல்போன், மடிக்கணினி, பணம், செயின் ஆகியவற்றை பறித்துச் செல்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இதுபோன்று மின் விளக்குகள் எரியாததால், சாலை விபத்தில் நுாறுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இதைத் தவிர்க்க, உயர்கோபுர மின் விளக்குகள் மற்றும் சாலையில் உள்ள மின் விளக்குகளை எரிய வைத்து, முறையாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், செங்கல்பட்டு மாவட்ட சட்டம் - ஒழுங்கு கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால், அதிகமாக சாலை விபத்துகள் நடப்பதாகவும், இதை தடுக்க, உயர்கோபுர மின் விளக்குகள் முறையாக எரிய, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, பழுதான உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில், உயர்கோபுர மின் விளக்குகள், மின் விளக்குகள் புதிதாக அமைக்க, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, சென்னை மண்டல அலுவலக அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், உயரதிகாரிகள் விரைந்து முடிவெடுத்து, இப்பணியை விரைந்து துவக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள், சாலை குறுக்கிடும் பகுதிகளில், உயர்கோபுர மின் விளக்குகள், பாலாற்று பாலங்களில் மின் விளக்குகள் புதிதாக அமைக்க, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு கோரி, ஆணையத்திற்கு பரிந்துரை அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தவுடன், பணிகள் துவக்கப்படும்.

-பொறியாளர்கள்,

சென்னை மண்டலம்,

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,சென்னை.

செங்கல்பட்டு மாவட்ட, தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாததால், சாலை விபத்து, வழிப்பறி சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இரவு நேரங்களில், இருசக்கர வாகனங்களில், குடும்பத்தினருடன் செல்லும் போது, அச்சத்துடன் சென்று வருகிறோம். வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி, உயர்கோபுர மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ஆர்.எஸ்.தணிகாசலம்,

சமூக ஆர்வலர்,

செங்கல்பட்டு.






      Dinamalar
      Follow us