/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் பெண்களுக்கு சிற்பங்கள் செதுக்கும் பயிற்சி
/
மாமல்லையில் பெண்களுக்கு சிற்பங்கள் செதுக்கும் பயிற்சி
மாமல்லையில் பெண்களுக்கு சிற்பங்கள் செதுக்கும் பயிற்சி
மாமல்லையில் பெண்களுக்கு சிற்பங்கள் செதுக்கும் பயிற்சி
ADDED : ஜூலை 23, 2024 01:21 AM

மாமல்லபுரம், பெண்களுக்கு சிற்பம் செதுக்கும் பயிற்சியளித்து, கைவினை தொழிலில் ஈடுபடுத்த, இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கி முயற்சித்துள்ளது.
தனியார் தன்னார்வ நிறுவனம் வாயிலாக, 30 பெண்களுக்கு முதல்கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு, கடந்த மாதம் பயிற்சி துவக்கப்பட்டது.
சிற்பக் கலைஞர் புண்ணியகோட்டி, துவக்கத்தில் அவர்களுக்கு ஓவியம் வரையும் பயிற்சியளித்தார். தொடர்ந்து, கடப்பா கல், பச்சைக் கல் ஆகியவற்றில், நான்கு, எட்டு பூவிதழ்கள், அன்னம், முகப்பாவனைகள் ஆகியவற்றை செதுக்கும் பயிற்சியளித்தார்.
தினசரி காலை, மாலை தலா 15 பேர் வீதம் பயிற்சியளிக்கப்படுகிறது. தினசரி, தலா 150 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. வீட்டுப் பணிகளில் முடங்கிய பெண்கள், ஆர்வத்துடன் பயிற்சி பெறுகின்றனர்.
ஒன்றரை மாத பயிற்சியில், பெண்கள் செய்த சிற்பங்களை, தன்னார்வ நிறுவன நிர்வாகிகள் பார்வையிட்டனர். அப்போது, சிற்பம் செதுக்கும் கலைப்பயிற்சியாக மட்டுமின்றி, வாழ்வாதார தொழிலாகவும் இப்பயிற்சி உதவும் என, பெண்கள் தெரிவித்தனர்.
மேலும் பெண்கள் ஆர்வம் காட்டினால், அடுத்தடுத்து பயிற்சியளிக்க ஏற்பாடு செய்வதாக, தன்னார்வ நிறுவனத்தினர் தெரிவித்தனர்.