/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பண்ணை குட்டை அமைக்க வேலுாரில் மாற்று இடம் தேர்வு
/
பண்ணை குட்டை அமைக்க வேலுாரில் மாற்று இடம் தேர்வு
ADDED : ஆக 11, 2024 02:14 AM
சித்தாமூர்,:சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட சூணாம்பேடு ஊராட்சியில், மணப்பாக்கம், காவனுார், வேலுார் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் காலனியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கப்பட்டு வருகிறது.
வேலுார் கிராமத்தில், மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் பண்ணை குட்டை அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டு, நேற்று முன்தினம் இப்பகுதிவாசிகள் வேலைக்கு சென்றனர்.
அப்போது, அங்கு வந்த தனிநபர், தங்களின் பயன்பாட்டில் உள்ள இந்த இடத்தில், பண்ணை குட்டை அமைக்கக் கூடாது என, நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், கிராம மக்கள் திரும்பச் சென்றனர்.
பின் இதுகுறித்து, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளிக்க சென்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர், அலுவலக வேலை காரணமாக செங்கல்பட்டு சென்றதால், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
கிராம மக்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், பண்ணை குட்டை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் விவசாயம் செய்து, ரவி மற்றும் சில குடும்பத்தினர் வாழ்ந்து வருவதை அறிந்தனர்.
அதனால், மக்கள் பயன்பாடு இல்லாத, 2.5 ஏக்கர் அரசு புறம்போக்கு மாற்று இடம் கண்டறியப்பட்டு, மாற்று இடத்தில் பண்ணைக் குட்டை அமைக்க பணி ஆணை தயார் செய்து, நாளை பண்ணைக் குட்டை அமைக்கும் பணி துவங்க உள்ளது.

