/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள் மாமல்லையில் போக்குவரத்து முடக்கம்
/
சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள் மாமல்லையில் போக்குவரத்து முடக்கம்
சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள் மாமல்லையில் போக்குவரத்து முடக்கம்
சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள் மாமல்லையில் போக்குவரத்து முடக்கம்
ADDED : ஜூலை 22, 2024 06:57 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, கிழக்கு, மேற்கு ராஜ வீதிகள், தென்மாட வீதி, கடற்கரை சாலை உள்ளிட்டவை உள்ளன. உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, சுற்றுலா வாகனங்களும் இச்சாலைகளில் அதிக அளவில் கடக்கின்றன.
அனைத்து சாலைகளின் இருபுறமும் உள்ள கடைகள், சாலை பகுதி வரை ஆக்கிரமித்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலை மிகவும் குறுகியுள்ளது.
கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
கடைகளுக்கு சரக்குகள் கொண்டு வரும் வேன், லாரி ஆகியவையும், போக்குவரத்து நெரிசல் நேரத்தில், சாலையிலேயே நிறுத்தி, சரக்குகளை இறக்குகின்றன.
இதனால், மற்ற வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியாமல், அப்பகுதியில் போக்குவரத்து முடங்குகிறது. ஒரே நேரத்தில், பேருந்து, லாரி உள்ளிட்ட பெரிய வாகனங்கள் எதிரெதிர் திசையில் வந்தால், அவை முன்னேறி செல்ல முடியவில்லை. அதனால், அவற்றின் பின் வாகனங்கள் நீண்டதுாரம் தேங்கி, கடும் நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, திருக்கழுக்குன்றம், கோவளம் சாலைகளில், இத்தகைய பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன. மருத்துவமனை உள்ளிட்ட அவசரத்திற்கு செல்வோர், எளிதில் செல்ல முடியவில்லை. தினசரி பள்ளி, அலுவலகம் செல்வோர் திண்டாடுகின்றனர்.
கடற்கரை சாலை, தென்மாட வீதி பகுதிகளில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது. நடைபாதை கடைகளாலும் சிக்கல் ஏற்படுகிறது.
கங்கை கொண்டான் மண்டபம் சந்திப்பு, பஜனை கோவில் சந்திப்புகள், கோவளம் சாலை ஆகிய பகுதிகளில், ஷேர் ஆட்டோக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன.
நெடுஞ்சாலைத் துறையினர், சாலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்றி, சாலைகளை அகலப்படுத்தி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு எச்சரிக்கை தடுப்பு அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.