/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேலையை உருவாக்குவோராக மாணவர்கள் இருக்க வேண்டும் வி.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு
/
வேலையை உருவாக்குவோராக மாணவர்கள் இருக்க வேண்டும் வி.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு
வேலையை உருவாக்குவோராக மாணவர்கள் இருக்க வேண்டும் வி.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு
வேலையை உருவாக்குவோராக மாணவர்கள் இருக்க வேண்டும் வி.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் பேச்சு
ADDED : ஆக 18, 2024 01:04 AM

திருப்போரூர்:கேளம்பாக்கம்- - வண்டலுார் சாலை, மேலக்கோட்டையூரில் உள்ள சென்னை வி.ஐ.டி., பல்கலையின் பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டடம் திறப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் மற்றும் நிறுவனர் விசுவநாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, கவுரவ விருந்தினராக எல்.டி.ஐ., மைண்ட்ரீ நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி சேதனா பட்நாயக் பங்கேற்றனர்.
விழாவில், 38 மாணவ -- மாணவியர் தங்கப் பதக்கம் பெற்றனர். 3,056 மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர்.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது:
இந்தியா, உலக அளவில் ஐந்தாவது பொருளாதார நாடாக தற்போது உள்ளது. விரைவில், மூன்றாவது மிக பெரிய நாடாக மாறும். இந்தியர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பதவி வகித்து வருகின்றனர்.
மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். 2047ம் ஆண்டு, இந்தியாவின் 100வது சுதந்திர தினத்தில், இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும். அது, மாணவர்களாகிய உங்களுடைய இன்றைய உழைப்பினால் சாத்தியமாகும்.
எளிதில் தொழில் தொடங்குவதற்கான நாடுகள் வரிசையில், 2014ம் ஆண்டு 142ம் இடத்தில் இருந்த நாம், தற்போது 63வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.
நாம் வேலை செய்வோராக இருப்பதை விட, வேலையை உருவாக்குவோராக இருக்க வேண்டும். மாற்றம் மற்றும் புதுமைக்கான தீபம் ஏற்றுபவர்களாக, மாணவர்கள் இருக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நம் முன்னேற்றத்துக்காக உதவியவர்களை வாழ்வில் மறக்கக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.டி., பல்கலை நிறுவனர் மற்றும் வேந்தர் விசுவநாதன் பேசியதாவது:
இந்தியாவின் 145 கோடி மக்கள் தொகையில், 10 சதவீதம் மட்டுமே பட்டதாரிகள். எனவே, அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் எனது பாராட்டுக்கள்.
உயர் கல்வியில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம், 27 சதவீதம் மட்டுமே. அது, 50 சதவீதமாக உயர வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட போது, நான் அதற்கு ஆதரவாக இருந்து ஓட்டு அளித்தேன்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை செலவழிக்கின்றன.
ஆனால், இந்தியா 3 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறது. அது சென்ற ஆண்டில் 2.8 சதவீதம் இருந்தது. நடப்பு ஆண்டில் 2.7 சதவீதமாக உள்ளது.
இதனால், நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு கிடைப்பதில்லை. கல்விக் கூடங்களில் கட்டுமானங்களுக்கு, அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கிறது. அதை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில், புதிய கட்டட திறப்பு விழா நடந்தது. விழாவில், வி.ஐ.டி., இணை துணைவேந்தர் தியாகராஜன், வி.ஐ.டி., வேலுார் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

