/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறநகர் பஸ் அடிக்கடி 'மக்கர்' மதுராந்தகம் பயணியர் புலம்பல்
/
புறநகர் பஸ் அடிக்கடி 'மக்கர்' மதுராந்தகம் பயணியர் புலம்பல்
புறநகர் பஸ் அடிக்கடி 'மக்கர்' மதுராந்தகம் பயணியர் புலம்பல்
புறநகர் பஸ் அடிக்கடி 'மக்கர்' மதுராந்தகம் பயணியர் புலம்பல்
ADDED : செப் 07, 2024 07:31 PM
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் கீழ், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயங்குகின்றன.
மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் 5,000க்கும் மேற்பட்ட பயணியர் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இதில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மதுராந்தகம் வழியாக பாண்டிச்சேரி, கடப்பாக்கம், செய்யூர், இரும்பேடு, சூணாம்பேடு, அனந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், தடம் எண்: 87ஏ புறநகர் பேருந்து, இரும்பேட்டில் இருந்து மதுராந்தகம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்து, நேற்று காலை 5:45 மணி அளவில் செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி பகுதியில், சக்கரத்தின் போல்ட் கட்டாகி நின்றது. ஓட்டுனரின் சாதுரியத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பேருந்தில் பயணம் செய்த பயணியர், மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். எனவே, பயணியரின் நலன் கருதி, புறநகர் பேருந்துகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது:
மதுராந்தகம் வழியாக இயக்கப்படும் புறநகர் பேருந்துகள் முறையான பராமரிப்புகள் இன்றி உள்ளது. தரமற்ற நிலையில் பழைய பேருந்துகளை இயக்குகின்றனர். இதனால், அடிக்கடி பேருந்துகள் பழுதாகி, வழியிலேயே நின்று விடுகின்றன.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மதுராந்தகம் பணிமனையின் கிளை மேலாளரிடம் மனு அளித்தும், தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.