/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வலை பாதுகாப்பு கூடம் அமைக்க தழுதாளிகுப்பம் மீனவர்கள் கோரிக்கை
/
வலை பாதுகாப்பு கூடம் அமைக்க தழுதாளிகுப்பம் மீனவர்கள் கோரிக்கை
வலை பாதுகாப்பு கூடம் அமைக்க தழுதாளிகுப்பம் மீனவர்கள் கோரிக்கை
வலை பாதுகாப்பு கூடம் அமைக்க தழுதாளிகுப்பம் மீனவர்கள் கோரிக்கை
ADDED : மார் 08, 2025 01:12 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட தழுதாளிகுப்பம் பகுதியில், 250க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நாட்டுப்படகு வாயிலாக கடலுக்குச் சென்று மீன் பிடித்தல் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.
தினமும் 120க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
கடந்த 2019 - 20 செய்யூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், இங்கு மீன்வலை பாதுகாப்பு கூடம் அமைக்கப்பட்டது.
இந்த மீன் வலை கூடம், 10 முதல் 15 மீனவர்களின் வலைகளை மட்டுமே பாதுகாக்கும் அளவில் உள்ளது.
இதனால், மீதமுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது வலைகளை, திறந்த வெளியில் வைத்து வருகின்றனர்.
மீன் வலைகளை திறந்த வெளியில் வைப்பதால், வெயில் மற்றும் மழையில் நனைந்து, விரைவில் மட்கி வலைகள் அறுந்து விடுவதால், மீனவர்களுக்கு அதிக அளவில் பொருட்சேதம் ஏற்படுகிறது.
மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில், மீன்வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லும் நிலை உள்ளது.
மேலும், வலை பின்னும் கூடம் இல்லாததால், கிழிந்த வலைகளை பின்ன இடவசதி இல்லாமல், மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தழுதாளிகுப்பம் பகுதியில் வலை பாதுகாப்பு மையம் மற்றும் மீன் வலை பின்னும் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.