/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலர்
/
மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலர்
ADDED : மே 25, 2024 11:23 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் கே.கே. நகர்., பகுதிகளில், நேற்று மாலை 3:10 மணியளவில், தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.
மழை மற்றும் புயல் காலங்களில் கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் கே.கே. நகர்., பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி, அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது.
இதை தொடர்ந்து, இப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் படி, கலெக்டர் உத்தரவின் போரில் நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் மழை நீர் சீராக செல்ல வசதியாக, எட்டு இடங்களில் சிறிய பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கப்பட்டு, பணிகள் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன.
இதை தொடர்ந்து, இனி வரும் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் சீராக செல்லுமா, தற்போதைய கள நிலவரம் குறித்து நேரில் வந்து தலைமை செயலர் ஆய்வு மேற்கொண்டார்.
உடன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சித்ரா, மண்டல செயற்பொறியாளர் மனோகரன், கமிஷனர் தாமோதரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதை தொடர்ந்து, நகராட்சி தலைவர் கார்த்திக் தலைமை செயலரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது:
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழையால் சேதமடைந்த சிறு பாலங்கள் மற்றும் விளையாட்டுத் திடல், துணை மின் நிலையம், சேதமடைந்த ரேஷன் கடைகளை சீரமைக்க வேண்டும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உரிய நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவரிடம் கூறினார்.