/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வையாவூரில் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி வீண்
/
வையாவூரில் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி வீண்
ADDED : மார் 05, 2025 01:58 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், வையாவூர் ஊராட்சியில், 2018ல், அ.தி.மு.க, ஆட்சியின்போது, 30 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது.
இப்பூங்காவில், நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்களான ராட்டினம், சறுக்கு, ஊஞ்சல் போன்ற சாதனங்களுடன் மைதானம், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம், ஓய்வெடுக்க இருக்கை வசதி, இயற்கை உபாதை கழிக்க கழிப்பறையும் கட்டப்பட்டது.
வையாவூர் கிராம மக்கள் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். கடந்த பல மாதங்களாக பராமரிப்பு இல்லாததால் பூங்கா சீரழிந்துள்ளது.
இதனால், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள் பழுதடைந்து உதிரிபாகங்கள் மாயமாகியுள்ளன. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்துள்ளன.
இரவில் ஒளிரும் மின் விளக்குகள் பகலில் எரிவதால் ஊராட்சி நிதி வீணாகிறது. உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்கள் மற்றும் கழிப்பறை, சேதமடைந்துள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால், 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா பயன்பாடின்றி உள்ளது.
எனவே, பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.