/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை ஒளிரும் தோட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
/
மாமல்லை ஒளிரும் தோட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
மாமல்லை ஒளிரும் தோட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
மாமல்லை ஒளிரும் தோட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்
ADDED : ஆக 17, 2024 08:02 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ஒளிரும் தோட்டம் பூங்கா கட்டமைப்புகளை விரைவில் நிறுவி, ஒரு மாதத்தில் சுற்றுலா பயன்பாட்டிற்கு துவக்கப்படும் என, சுற்றுலாத் துறை கமிஷனர் சமயமூர்த்தி தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில், தொல்லியல் துறை அலுவலகம் அருகில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், மரகத பூங்காவை, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த 2009ல் அமைக்கப்பட்டது.
சிற்பங்களை காணும் சுற்றுலா பயணியர் இளைப்பாற, பூங்கா அமைக்க வேண்டிய அவசியம் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மலர் செடிகளுடன் புல்வெளி, கலாசார கலைகள் கண்டுமகிழ திறந்தவெளி மாடம், கற்களில் நடைபாதை, அலங்கார மின்விளக்குகள் ஆகியவற்றுடன், இப்பூங்காவை சுற்றுலா நிர்வாகம் அமைத்தது.
துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் பயனின்றி வீணானது. பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், இங்கு கடந்த 2019ல் சந்தித்தபோது, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், அலங்கார செடிகளுடன் புதிய புல்வெளி அமைக்கப்பட்டது.
ஆனால், பயணியரை அனுமதிக்காமல், கடந்த ஐந்து ஆண்டுகளாக பயனின்றி வீணாகியது. சுற்றுலா பயன்பாட்டிற்கேற்ப, பூங்கா வளாகத்தை மேம்படுத்த வலியுறுத்தப்பட்ட நிலையில், சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தனியார் நிறுவன முதலீட்டு பங்களிப்பில், 8 கோடி ரூபாய் மதிப்பில், ஒளிரும் தோட்டம் அமைக்க முடிவெடுத்தது.
எல்.இ.டி., விளக்கொளியில், மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மிளிர்வது, தண்ணீர் பூங்கா, செயற்கை நீரூற்று ஆகியவை, நவீன விளக்கொளியில் ஒளிர்வது, 5டி தியேட்டரில் படம் காண்பது உள்ளிட்ட வசதிகளுடன், ஒளிரும் தோட்டம் அமையவுள்ளது. ஓராண்டிற்கு முன் பூமிபூஜை நடத்தியும், இதுவரை பணிகள் நடக்கவில்லை.
இது குறித்து, சுற்றுலாத்துறை கமிஷனர் சமயமூர்த்தி கூறியதாவது:
ஒளிரும் தோட்டம் திட்டம், தனியார் - பொது பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஒப்பந்த நிறுவனம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, தற்போது பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பூங்காவில் நிறுவப்பட உள்ள கட்டமைப்புகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. கட்டமைப்புகளை விரைவில் இங்கு நிறுவி, ஒரு மாதத்திற்குள், சுற்றுலா பயன்பாட்டிற்கு துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.