/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டும் குழியுமான சாலை பொது மக்கள் கடும் அவதி
/
குண்டும் குழியுமான சாலை பொது மக்கள் கடும் அவதி
ADDED : மார் 03, 2025 11:26 PM

மறைமலை நகர், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் ஆப்பூர் -வளையகரணை இடையே 3. கி.மீ., துார சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக வளையகரணை கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு தங்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
பலர் ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை பல ஆண்டுகளாக சிதிலமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை முழுதும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இருபுறமும் வனப்பகுதி என்பதால் முள் செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து உள்ளன.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதை தவிர்த்து 2 கி.மீ., துாரம் சுற்றி செல்கின்றனர்.
இது குறித்து வளையகரணை கிராம மக்கள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. கோடை காலங்களில் அருகில் உள்ள ஏரியில் தண்ணீர் இருக்காது அப்போது அங்கு உருவாகும் தற்காலிக பாதைகளில் சென்று வருவோம் மற்ற நேரங்களில் 2 கி.மீ., சுற்றி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சாலை வழியாக சென்று வருகிறோம்.
சாலையின் இருபுறமும் வனப்பகுதி என்பதால் வனத்துறையினர் புதிய சாலை அமைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர்.
மேலும் இந்த சாலையில் பெரும்பாலான பகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. ஆனால் இந்த சாலையை பயன்படுத்துவது காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் ஒன்றியம், வளையகரணை கிராம மக்கள் என்பதால் இருமாவட்ட அரசு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
இதன் காரணமாக அவசர காலங்களில் கூட செல்ல முடியாமலும், அடிக்கடி வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி விடுகின்றன. எனவே இரு மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு இந்த சாலையை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.