/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சவுக்கு மரத்தால் மின் கம்பம் 'மாற்றி யோசித்த' மின்வாரியம்
/
சவுக்கு மரத்தால் மின் கம்பம் 'மாற்றி யோசித்த' மின்வாரியம்
சவுக்கு மரத்தால் மின் கம்பம் 'மாற்றி யோசித்த' மின்வாரியம்
சவுக்கு மரத்தால் மின் கம்பம் 'மாற்றி யோசித்த' மின்வாரியம்
ADDED : மே 01, 2024 01:04 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் ஊராட்சி பகுதியில், விவசாயமே பிரதான தொழில். இங்கு, ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, நெல், கரும்பு, மணிலா மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இப்பகுதியில், கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக, விவசாய நிலங்கள் வழியே மின்சாரம் செல்லும் மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது.
அது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், புதிதாக மின் கம்பம் மாற்றி அமைக்காமல் கிடப்பில் போட்டனர். தொடர்ச்சியான புகார்களால், தற்காலிகமாக சவுக்கு மரத்தால் கம்பம் ஏற்படுத்தி, மின் இணைப்பு அளித்தனர்.
ஆத்துார் விவசாயி கோ.சண்முகம், 47, என்பவர் கூறியதாவது:
விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் செல்லக்கூடிய மின்கம்பம், கடந்த ஆண்டு மழையால் முறிந்தது. விவசாயிகளே மின் கம்பம் வாங்கிக் கொடுத்தும், மின் வாரியம் பழுது பார்க்கவில்லை.
தற்காலிகமாக சவுக்கு மரத்தில் மின்கம்பம் ஏற்படுத்தி, மின் இணைப்பு அளித்துள்ளனர். மேலும், அறுந்து கிடந்த மின் ஒயரை சுருட்டி, கைக்கு எட்டும் உயரத்தில், சவுக்கு மர கம்பத்தில் வைத்துள்ளனர்.
இதனால், ஆடு, மாடு மற்றும் மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இது குறித்து,பெரும்பேர்கண்டிகையில் உள்ள செயற்பொறியாளரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
புதிதாக மின் கம்பம் எடுத்து வந்து, ஆறு மாதங்களாக வயல் வரப்பில் கிடக்கிறது. ஆனால், மாற்றி அமைக்காமல், மின் வாரிய ஊழியர்கள் அலட்சியமாக உள்ளனர்.
சவுக்கு மர கம்பத்தால் அசம்பாவிதம் ஏற்படும் முன், புதிதாக மின் கம்பத்தை மாற்றி அமைத்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.