/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சார வாகனங்களை 'சார்ஜ்' செய்வதில் பிரச்னை; அடுக்குமாடி குடியிருப்புகளில் தெளிவான வழிமுறை இல்லாததால் அவதி
/
மின்சார வாகனங்களை 'சார்ஜ்' செய்வதில் பிரச்னை; அடுக்குமாடி குடியிருப்புகளில் தெளிவான வழிமுறை இல்லாததால் அவதி
மின்சார வாகனங்களை 'சார்ஜ்' செய்வதில் பிரச்னை; அடுக்குமாடி குடியிருப்புகளில் தெளிவான வழிமுறை இல்லாததால் அவதி
மின்சார வாகனங்களை 'சார்ஜ்' செய்வதில் பிரச்னை; அடுக்குமாடி குடியிருப்புகளில் தெளிவான வழிமுறை இல்லாததால் அவதி
ADDED : ஆக 12, 2024 03:23 AM

அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கான, 'சார்ஜிங்' வசதிகளை ஏற்படுத்துவது, பயன்படுத்துவது தொடர்பான விஷயங்களில் தெளிவான விதிமுறைகள் இல்லாததால் மக்கள் அவதியடைகின்றனர்.
தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் வெகுவாக அதிகரித்துள்ளன. ஒரு கிரவுண்டு எனப்படும், 2,400 சதுர அடி நிலத்தில் கூட, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
இது போன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்போது அதில், வாகன நிறுத்தங்கள், மழைநீர் சேகரிப்பு வசதி, சோலார் மின்சார உற்பத்திக்கான வசதி போன்ற புதிய அம்சங்கள் அவசியமாகின்றன.
இந்த வசதிகளை அமைப்பது குறித்து, கட்டுமான விதிகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாடு முழுதும் மின்சார வாகனங்களை பயன்படுத்துவது, படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களை பயன்படுத்துவோர், அதில் உள்ள பேட்டரிகளை தேவை அடிப்படையில் சார்ஜ் செய்ய வேண்டும்.
பெட்ரோல் பங்க்குகள், மெட்ரோ ரயில் நிலைய வளாகங்கள் போன்ற இடங்களில் சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
பொது பயன்பாட்டுக்கான கட்டுமான வளாகங்களில், இதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
ஆனால், தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதியை ஏற்படுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால், மின்சார வாகனங்கள் வாங்குவோர் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தெளிவு தேவை
இது குறித்து மின்சார வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தனி வீடுகளில் வசிப்பவராக இருந்தால், மின்சார வாகனங்களை உரிய அடாப்டர்களை பயன்படுத்தி, வழக்கமான பிளக் பாயின்ட்கள் வாயிலாகவே சார்ஜிங் செய்யலாம்.
ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளில், பொது இடங்களில் உள்ள மின்சார பிளக் பாயின்ட்களை இதற்கு பயன்படுத்த, பிற உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் மோட்டார், பொது இடங்கள், லிப்ட் போன்ற பொது வசதிக்கான மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வாகனங்களை சார்ஜிங் செய்ய எதிர்ப்பு எழுகிறது.
தரைதளம், முதல் தளத்தில் வசிப்போர், தங்கள் வீட்டுக்கான மின்சார இணைப்பில் இருந்து கூடுதல் ஒயர் வாயிலாக வாகனங்களை சார்ஜிங் செய்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
புரிதல் இல்லை
இதற்கு மேல்தளங்களில் வசிப்பவர்கள், இவ்வாறு முயற்சிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. சென்னையில், 'ஏத்தர்' எனப்படும் மின்சார வாகன விற்பனை நிறுவனம், 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகன சார்ஜிங் வசதியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இதற்கான மின்சார இணைப்பை பெறுவது, கட்டணம் விஷயங்களில் வீட்டு உரிமையாளர் சங்கங்களுக்கு தெளிவான புரிதல் இல்லை.
குறிப்பிட்ட சிலர் மட்டும் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகளை ஏற்படுத்துவதில், வீட்டு உரிமையாளர் சங்கங்கள் ஆர்வம் காட்டுவது இல்லை.
மழைநீர் சேகரிப்பு, சோலார் மின்சார வசதி போன்று, சார்ஜிங் செய்வதற்கான வழிமுறைகளையும் கட்டட விதிகளில் சேர்த்தால் மட்டுமே தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளின் அடித்தள பகுதி வாகன நிறுத்துமிடமாக அமைக்கப்படுகிறது. இந்த இடத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதியை, கட்டுமான நிறுவனங்களே, தற்போது செய்து கொடுக்கின்றன. இதற்கான மின்சார இணைப்பு, பயன்பாடு, கட்டணம் உள்ளிட்ட விஷயங்கள் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவுக்கு விடப்படுகிறது. பழைய கட்டடங்களில் இந்த வசதி வேண்டும் என்றால், அங்கு வீடு வாங்கிய உரிமையாளர்களின் சங்கங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
- எஸ்.ராமபிரபு, நிர்வாகி, இந்திய கட்டுனர், வல்லுனர் சங்கத்தின் தென்னக மையம்
- நமது நிருபர் -