/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் கிணறு சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டம்
/
குடிநீர் கிணறு சுற்றுச்சுவர் இடிந்து தரைமட்டம்
ADDED : மார் 08, 2025 11:53 PM

மதுராந்தகம்,
அச்சிறுபாக்கம் ஒன்றியம், மொறப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகருணாகரவிளாகம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சின்னகருணாகர விளாகத்தில் உள்ள ஏரியில் குடிநீர் கிணறு உள்ளது.
குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய் வாயிலாக, மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த குடிநீர் கிணறு வெட்டப்பட்டது.
கடந்தாண்டு, 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுற்றுச்சுவர் மீது இரும்பு வலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில், திடீரென கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து, கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
இதனால், சின்னகருணாகரவிளாகம் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, மாற்று ஏற்பாடாக, அப்பகுதியில் உள்ள கை பம்ப் மற்றும் குடிநீர் 'மினி டேங்க்'குகளை சீரமைத்து தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், புதிதாக குடிநீர் கிணறு அமைக்க, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.