/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் பி.டி.ஓ., நிர்வாகம் தி.மு.க.,வினர் தலையீடால் சீர்குலைவு
/
திருக்கழுக்குன்றம் பி.டி.ஓ., நிர்வாகம் தி.மு.க.,வினர் தலையீடால் சீர்குலைவு
திருக்கழுக்குன்றம் பி.டி.ஓ., நிர்வாகம் தி.மு.க.,வினர் தலையீடால் சீர்குலைவு
திருக்கழுக்குன்றம் பி.டி.ஓ., நிர்வாகம் தி.மு.க.,வினர் தலையீடால் சீர்குலைவு
ADDED : ஆக 30, 2024 10:25 PM
திருக்கழுக்குன்றம்:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ், வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் இயங்கி வருகிறது. ஊராட்சிப் பகுதிகளில், குடிநீர், பொது சுகாதாரம், சாலை, ஏழைகளுக்கு குடியிருப்பு வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் மேம்பாட்டு திட்டங்கள், இதன்கீழ் செயல்படுத்தப்படுகின்றன.
நிர்வாகம் மற்றும் திட்டங்கள் செயல்பாட்டிற்காக, வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி என, இரு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாற்றுகின்றனர்.
திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகத்தை, தி.மு.க., பிரமுகர்கள் கட்டுப்படுத்தி சீர்குலைப்பதாகவும், இங்கு நியமிக்கப்படும் அதிகாரிகள், பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே வேறு பகுதிக்கு மாற்றலாகி சென்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறையினர் கூறியதாவது:
தி.மு.க., பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் தான் அலுவலகமே இயங்குகிறது. அரசின் திட்டப் பணிகளுக்கு, அவர்களே முடிவெடுத்து வாய்மொழி உத்தரவிடுகின்றனர்.
ஆன்லைன் டெண்டர் என்றாலும், எந்த ஒப்பந்ததாரருக்கு, என்ன பணி என்பதையும் முடிவெடுக்கின்றனர். டெண்டரில் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் அனுமதித்து, மற்றவர்களுக்கு டெண்டர் பற்றியே அறிவிப்பதில்லை.
ஆளுங்கட்சியினரின் உத்தரவிற்கு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என, கட்டாயப்படுத்துகின்றனர். மறுப்பவர்களை, அவர்களே வேறிடத்திற்கு மாற்றி விடுகின்றனர். அல்லது அதிகாரிகளே மாறிச் சென்றுவிடுகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் லாவண்யா, கடந்த மார்ச் மாதம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டார். அதன்பின் வந்த ஹரிபாஸ்கர்ராவ், தாககுப்பிடிக்க முடியாமல், கடந்த மாதம் வேறிடத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.
வட்டார ஊராட்சி - வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, கடந்த ஏப்ரல் மாதம் மாற்றப்பட்டார். அதனால், அப்பணியிடம் ஏப்., முதல் காலியாக உள்ளது.
தற்போது, கிராம ஊராட்சி - வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், வட்டார ஊராட்சி அலுவலர் பணியிடத்திற்கும், கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
தொடர்ந்து ஆளுங்கட்சியினரின் அட்டூழியத்தால், நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. வட்டார வளர்ச்சி நிர்வாகத்தில், தி.மு.க.,வினரின் தலையீட்டை தடுக்க, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.