கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா? அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
கோர்ட் உத்தரவை நிறைவேற்றாததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறுவதா? அரசு அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
ADDED : டிச 11, 2025 03:37 AM

சென்னை: 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு, தேர்தல் பணிகளை காரணமாகக் கூறக்கூடாது' என, அரசு அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், கடந்த 2007ம் ஆண்டு துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தன் பெயரை, கடந்த 2006ம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி, வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், '12 வாரங்களில் 2006ம் ஆண்டு பட்டியலில், ராஜாகுமார் பெயரை சேர்க்க வேண்டும். உரிய பணப்பலன்களை வழங்க வேண்டும்' என, கடந்த மார்ச்சில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ராஜாகுமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி, 'மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்த நிலையில், அதன் பின் ஆறு மாதங்களாகியும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்' என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு, 'தேர்தல் தொடர்பான பணிகள் காரணமாக, உத்தரவை அமல்படுத்த இயலவில்லை' என, அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு, தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது. பணப்பலன்கள் சொற்ப தொகைதான் வரும். அதை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்.
' இதுபோல் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருந்தால், நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக தண்டனை விதிப்பதை தவிர, வேறு வழியில்லை.
' இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் உத்தரவை அமல்படுத்தாவிட்டால், கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்' என எச்சரித்து, வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த கால அவகாசம் கேட்கலாம் அல்லது உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.
இந்த இரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாவிட்டால், உத்தரவை அமல்படுத்தியே ஆக வேண்டும்.
நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு, தலைமைச் செயலர் அறிவுறுத்த வேண்டும் என, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலிடம் தெரிவித்தனர்.

