/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவிடந்தை கோவில் திருமண மண்டபம் விரைந்து பணிகளை முடிக்க எதிர்பார்ப்பு
/
திருவிடந்தை கோவில் திருமண மண்டபம் விரைந்து பணிகளை முடிக்க எதிர்பார்ப்பு
திருவிடந்தை கோவில் திருமண மண்டபம் விரைந்து பணிகளை முடிக்க எதிர்பார்ப்பு
திருவிடந்தை கோவில் திருமண மண்டபம் விரைந்து பணிகளை முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 26, 2024 08:50 PM

மாமல்லபுரம்:திருவிடந்தையில் கட்டப்பட்டு வரும் அறநிலையத் துறை திருமண மண்டபப் பணிகளை விரைந்து முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது.
மூலவராக ஆதிவராக பெருமாள் வீற்றுள்ளார். அவர், காலவ முனிவரின் மகள்களை, தினம் ஒருவராக திருமணம் செய்ததால், நித்ய கல்யாண பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
திருமண தடை, ராகு, கேது தோஷ பரிகார கோவிலாக விளங்கும் இக்கோவிலுக்கு, தினசரி பக்தர்கள் திரண்டு வந்து வழிபடுகின்றனர்.
திருமண பரிகாரம் கருதி, இங்கு திருமணம் செய்ய விரும்பும் நிலையில், கோவிலில் திருமணம் செய்ய அனுமதியில்லை.
கோவிலை சார்ந்த திருமண மண்டபமும் இல்லை. பக்தர்கள் வலியுறுத்தியதன் காரணமாக, 4.30 கோடி ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.
முதல்வர் ஸ்டாலின், கடந்த 2022 ஆகஸ்டில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார்.
இதற்கிடையே, மண்டப வளாகத்திற்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர், வாகனங்கள் நிறுத்த 89 லட்சம் ரூபாய் மதிப்பில் 'பேவர் பிளாக்' தளம் ஆகியவை அமைக்கவும், நடப்பாண்டு துவக்கத்தில் தனி ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டப கட்டுமானப் பணிகளை துவக்கி ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், கட்டடம் மட்டும் கட்டி முடிக்கப்பட்டு, பிற பணிகள் மந்தமாக நடந்து வருகிறது.
அதனால், மண்டபம் பயன்பாட்டிற்கு வருவது தாமதமாகிறது. எனவே, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

