/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவொற்றியூர் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிறைபிடிப்பு ஆறு மாதங்களாக சப்ளையின்றி தவிப்பதாக மக்கள் ஆவேசம்
/
திருவொற்றியூர் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிறைபிடிப்பு ஆறு மாதங்களாக சப்ளையின்றி தவிப்பதாக மக்கள் ஆவேசம்
திருவொற்றியூர் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிறைபிடிப்பு ஆறு மாதங்களாக சப்ளையின்றி தவிப்பதாக மக்கள் ஆவேசம்
திருவொற்றியூர் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிறைபிடிப்பு ஆறு மாதங்களாக சப்ளையின்றி தவிப்பதாக மக்கள் ஆவேசம்
ADDED : ஜூலை 23, 2024 01:35 AM

திருவொற்றியூர், திருவொற்றியூரில் ஆறு மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் ஆவேசமடைந்த அப்பகுதியினர், அதிகாரிகளை சிறைபிடித்தனர். பிரச்னை பூதாகரமாவதை தடுக்க, அவசர கதியில் லாரி குடிநீரை வரவழைத்து அதிகாரிகள் வினியோகித்தனர்.
திருவொற்றியூர், ஏழாவது வார்டு, கார்கில் நகரில், 15 தெருக்கள் உள்ளன. இங்கு, 2,000 குடியிருப்புகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியினருக்கு, மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில், குழாய் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
தினம் 15 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகிக்க வேண்டும். ஆனால், 7 - 10 எம்.எல்.டி., தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அதிலும், கடந்த ஆறு மாதங்களாக இப்பகுதியினருக்கு போதிய குடிநீர் கிடைக்கவில்லை.
ஒரு நாள் இடைவெளியில், ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டதால், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். தவிர, மேடான பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் தடை உள்ளது.
அழுத்தம் குறைவால் தண்ணீர் வினியோகம் தடைபடுகிறது. சில இடங்களில் வினியோகிக்கப்படும் தண்ணீரும் மாசு கலந்து, நிறம் மாறி வருகிறது.
ஆறு மாதங்களாக தொடர்ந்து அப்பகுதியினர் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு மோசமாக உருவெடுத்ததால், ஆவேசமடைந்தனர்.
இதற்கு மாற்று ஏற்பாட்டையும் குடிநீர் வாரிய அதிகாரிகள் செய்யாததால், அதிருப்தியடைந்த அப்பகுதியினர், அருகே, ராமசாமி நகரில் உள்ள நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அங்கிருந்து குடிநீர் வாரிய அதிகாரியை, 100க்கும் மேற்பட்டோர் சிறைபிடித்து, தண்ணீர் முறையாக வழங்காதது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்; இன்னொரு பிரிவினர் கார்கில் நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள், அந்த வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் அங்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். லாரி குடிநீரை உடனடியாக வரவழைத்து, அப்பகுதியினருக்கு வினியோகித்தனர்.
பகுதிமக்கள் கூறியதாவது:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்குவதால் போதவில்லை. இந்நிலையில், தண்ணீர் கலங்கலாகவும், மாசடைந்தும் வருகிறது.
அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், இப்பிரச்னையை கண்டு கொள்வதேயில்லை. குறைந்த மின் அழுத்தம், மின் தடை பிரச்னை இருப்பதால், மோட்டார் இயக்குவதிலும் சிக்கல் இருக்கிறது.
அதிகாரிகள் யாரும் இந்த பக்கம் வருவதும் இல்லை; எங்கள் குறைகளை சரி செய்வதும் இல்லை. தினசரி குடிநீருக்காக போராடி கொண்டிருந்தால், மற்ற வேலைகளை எப்படி பார்ப்பது?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் பராமரிப்பு காரணமாக உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், தண்ணீர் வினியோகத்தில் சிக்கல் இருப்பதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், மாற்று ஏற்பாடாக புழல் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, சுத்திகரிப்பு செய்து தண்ணீர் வழங்குவதாகவும், அந்த தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால், பயன்படுத்த மக்கள் தயங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கவுன்சிலர் கார்த்திக் கூறியதாவது:
தரமற்ற முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுவது குறித்து, பலமுறை மண்டல கூட்டத்தில் கூறியுள்ளேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் முழுமையாக செயல்படவில்லை. இதனால், அதிகாரிகளும் என்ன செய்வதென தெரியாமல் உள்ளனர்.
தற்காலிக தீர்வாக, லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். போராட்டம், முற்றுகையில் ஈடுபட்டால் தான் தண்ணீர் முறையாக கிடைக்கிறது.
மீண்டும் அடுத்த சில நாட்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மீண்டும் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவொற்றியூர் மண்டலத்தின் தினசரி குடிநீர் தேவை, 14 எம்.எல்.டி., ஆகும். இடைப்பட்ட மாதங்களில், 7 - 8 எம்.எல்.டி., அளவில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. அதை பிரித்து, குடிநீர் வினியோகிப்பதில் பற்றாக்குறை நிலவியது. தற்போது, 12 எம்.எல்.டி., வரை வழங்கப்படுவதால், பிரச்னை ஏதுமில்லை. ஏழாவது வார்டில், மூன்று லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். மணலியில் தினசரி தேவை 9.25 எம்.எல்.டி.,யாக உள்ளது. குடிநீர் வினியோகத்தில் பிரச்னை கிடையாது.
- மண்டல அதிகாரிகள்