/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடம்பாக்கம் ஏரி குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஆய்வு முடிவை வெளியிட தீர்ப்பாயம் உத்தரவு
/
மாடம்பாக்கம் ஏரி குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஆய்வு முடிவை வெளியிட தீர்ப்பாயம் உத்தரவு
மாடம்பாக்கம் ஏரி குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஆய்வு முடிவை வெளியிட தீர்ப்பாயம் உத்தரவு
மாடம்பாக்கம் ஏரி குடிநீரில் கழிவுநீர் கலப்பு ஆய்வு முடிவை வெளியிட தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : ஆக 15, 2024 08:20 PM
சென்னை:தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான மாடம்பாக்கம் ஏரி, 400 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியை நம்பி 200 ஏக்கரில் விவசாயமும் நடந்து வருகிறது.
தாம்பரம் மாநகராட்சி சார்பில், மாடம்பாக்கம் ஏரியில் ஐந்து கிணறுகள் அமைக்கப்பட்டு, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 10க்கும் அதிகமான இடங்களில் கழிவுநீர் கலப்பதால் மாடம்பாக்கம் ஏரி மாசடைந்துள்ளது.
இதனால், அங்குள்ள கிணறுகளில் இருந்து வழங்கப்படும் நீரில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக, நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், 'மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பது குறித்து, குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் அருண்குமார் வர்மா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'தாம்பரம் மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று, குடிநீர் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. மாடம்பாக்கம் ஏரியிலிருந்து வழங்கப்படும் குடிநீர், குடிப்பதற்கு ஏற்றது என உறுதிப்படுத்தப்பட்டது' என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வக அறிக்கையையும் வாரியம் இணைத்துள்ளது. ஆனால், குடிநீர் மாதிரிகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது, ஒவ்வொரு நிலையிலும் தண்ணீரின் தரம் என்ன என்பது குறித்து, விரிவான விபரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
மாடம்பாக்கம் ஏரியில் உள்ள ஐந்து கிணறுகள், ஏரியின் நடுப்பகுதி, கழிவுநீர் கலக்கும் இடங்களில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீர் மாதிரிகளை எடுத்துள்ளது. ஆனால், இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
வழக்கின் அடுத்த விசாரணை தேதியான வரும் செப்., 11ம் தேதிக்குள், குடிநீர் மாதிரி ஆய்வு முடிவுகள் அடங்கிய அறிக்கையை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.