/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பராமரிப்பற்ற அனந்தமங்கலம் பூங்கா பல லட்சம் ரூபாய் உபகரணம் வீண்
/
பராமரிப்பற்ற அனந்தமங்கலம் பூங்கா பல லட்சம் ரூபாய் உபகரணம் வீண்
பராமரிப்பற்ற அனந்தமங்கலம் பூங்கா பல லட்சம் ரூபாய் உபகரணம் வீண்
பராமரிப்பற்ற அனந்தமங்கலம் பூங்கா பல லட்சம் ரூபாய் உபகரணம் வீண்
ADDED : பிப் 24, 2025 01:03 AM

அச்சிறுபாக்கம்:ஒரத்தி அருகே அனந்தமங்கலம் ஊராட்சியில், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா பூங்கா, உடற்பயிற்சிக்கூடம் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம், அனந்தமங்கலம் ஊராட்சியில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளவும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்கா, உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.
குழந்தைகள் பொழுதுபோக்க, விளையாட்டு உபகரணங்களும் பொருத்தப்பட்டன.
இளைஞர்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு, அதில் பல உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக, சிமென்ட் கான்கிரீட், 'பேவர் பிளாக்' நடைபாதை, எல்.இ.டி., விளக்குகளுடன் கூடிய கம்பம், பார்வையாளர்கள் அமர இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது.
அத்துடன் ராட்டினம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், டென்னிஸ் விளையாட்டு, கழிப்பறை, குடிநீர் வசதி, தோட்டம் மற்றும் கழிப்பறை பராமரிப்பிற்கு தேவையான தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இத்தனை வசதி இருந்தாலும், பூங்காவை சரியான முறையில் ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அனைத்து உபகரணங்களும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து உள்ளன.
நடை பயிற்சி தளமும் சேதமடைந்துள்ளது.
பூங்கா வளாக பகுதியில் குப்பை தேங்கி, நடந்து செல்ல முடியாத வகையில் காலி மதுபாட்டில்கள் உடைத்து வீசப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி பூங்காவில் உள்ள உபகரணங்கள் திருடப்படுகின்றன.
இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக, பூங்கா மாறி வருகிறது.
எனவே, பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தை பராமரிப்பு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

