/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிட்லப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் தலைமை செயலரிடம் நலச்சங்கத்தினர் புகார்
/
சிட்லப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் தலைமை செயலரிடம் நலச்சங்கத்தினர் புகார்
சிட்லப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் தலைமை செயலரிடம் நலச்சங்கத்தினர் புகார்
சிட்லப்பாக்கம் ஏரி புனரமைப்பு பணிகள் தலைமை செயலரிடம் நலச்சங்கத்தினர் புகார்
ADDED : மே 25, 2024 06:27 PM

சிட்லபாக்கம் : சிட்லப்பாக்கம் ஏரியில், 25 கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் புனரமைப்பு பணிகளை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மழைநீர் வரத்து கால்வாய் துார்ந்து போய்விட்டதாக, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
தாம்பரம் மாநகராட்சி, சிட்லப்பாக்கத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 102 ஏக்கர் பரப்புடைய ஏரி உள்ளது.
ஆக்கிரமிப்புகளால் ஏரியின் அளவு பாதியாக சுருங்கி விட்டது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கழிவு நீர் கலந்தது. இதனால், ஏரி நீர் மாசடைந்து, சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர் நாசமானது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, ஏரியை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஏரி புனரமைப்பு பணி, 2019ல் துவங்கியது.
ஏரியில் இருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார்வாரி ஆழப்படுத்தப்பட்டது. கான்கிரீட் கற்களால் கரை பலப்படுத்தப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கரையில் 32 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு புறம், மதகு கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்பணிகளை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, 'பச்சைமலை பகுதியில் இருந்து சிட்லப்பாக்கம் ஏரிக்கு மழைநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் கால்வாய் துார்ந்து போய்விட்டது. மேலும், ஏரியை சுற்றி நடைபாதை அமைக்க வேண்டும்' என, அப்பகுதி நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சி, 34வது வார்டுக்கு உட்பட்ட ஜட்ஜ் காலனியில் நடந்து வரும் மழைநீர் கால்வாய், இரும்புலியூர் ஏரி கலங்கல் பகுதியில், 96.50 கோடியில் கட்டப்பட்டு வரும் மூடுகால்வாய் பணிகளையும், தலைமை செயலர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.