/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொடூர் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
/
கொடூர் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
கொடூர் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
கொடூர் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
ADDED : மே 04, 2024 10:33 PM

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்தில் 127 கிராமங்கள் உள்ளன. இதில், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலேயே பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக, செய்யூர் பகுதி உள்ளது. இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
மேலும், சம்பா பருவத்தில் மட்டுமே 85 சதவீத மக்கள் விவசாயம் செய்கின்றனர். மற்ற நேரத்தில் கட்டடம் கட்டுதல், மரம் வெட்டுதல், மூட்டை துாக்குதல் போன்ற கூலி வேலைக்கு செல்கின்றனர்.
இப்பகுதியில் ஆண்டுக்கு, 2,000 படித்த பட்டதாரிகள் உருவாகின்றனர்.
பெரிய அளவில் தொழிற்சாலை அல்லது தொழிற்பேட்டை இல்லாததால், வேலைக்காக இளைஞர்கள் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு செல்கின்றனர்.
பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், செய்யூர் பகுதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தவும், அரசு தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என, இப்பகுதி வாசிகள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், செய்யூர் அடுத்த கொடூர் கிராமத்தில், 99 ஏக்கர் பரப்பளவில், 45.94 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
இதனால், 1,500 பேர் நேரடியாகவும், 4,000 பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் வகையில், 103 தொழில் மனைகளுடன் கூடிய புதிய சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
பின் கடந்த ஜூன் 27ம் தேதி காணொலி காட்சி வாயிலாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடூர் சிட்கோ தொழிற்பேட்டை திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டம் துவக்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற உள்ள நிலையில், தற்போது வரை சாலை மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி முடிவடையாமல் உள்ளது.
ஓராண்டிற்குள் சிட்கோ தொழிற்பேட்டை செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாலை மற்றும் வடிகால் முடியாதது, இப்பகுதி இளைஞர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து, தொழிற்சாலைகள் துவங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.