/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் தொல்லியல் மையம் திறப்பு எப்போது?
/
கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் தொல்லியல் மையம் திறப்பு எப்போது?
கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் தொல்லியல் மையம் திறப்பு எப்போது?
கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் தொல்லியல் மையம் திறப்பு எப்போது?
ADDED : பிப் 26, 2025 11:59 PM

கிளாம்பாக்கம், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே அமைக்கப்பட்டுள்ள காலநிலைப் பூங்காவில், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மையத்தை திறக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில், 16 ஏக்கர் பரப்பில், 15.2 கோடி ரூபாய் செலவில் காலநிலைப் பூங்கா உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
இந்த பூங்காவில் தொல்லியல் விளக்க மையம், அகழிகள், மழைநீர் குளங்கள், உயர்மட்ட நடைபாதை, மரத்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, சிலைகள், விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் கண்காட்சி மேடைகள் என, பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
தவிர, 50 கார்கள் மற்றும் 500 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உடற்பயிற்சிக்கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. பூங்காவை சுற்றிப் பார்க்க, வாகனம் நிறுத்த கட்டணம் இல்லை.
தமிழர்களின் ஐந்து வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய இடங்களில் வளரக்கூடிய தாவர இனங்கள், இங்கே வளர்க்கப்பட்டு உள்ளன. தவிர, அரிய வகை பூச்செடிகளும், செடி, கொடிகளும் வளர்க்கப்படுகின்றன.
இதில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட தொல்லியல் விளக்க மையம் இன்னும் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
தற்போது, காலை 5:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் பூங்கா திறந்துள்ளது. நடைபயிற்சி செய்யவும், குழந்தைகளுடன் பொழுதுபோக்கவும் சிறந்த இடமாக உள்ளது.
தவிர காடுகள், புதர் காடுகள், கடலோர நிலப் பரப்புகள், புல்வெளிகள், அழிந்துவரும் பூர்வீக காடுகள், குன்றுகள் பற்றி வைக்கப்பட்டுள்ள குறிப்பு பலகைகள் சுவராசியமாக உள்ளன.
ஆனால், தொல்லியல் விளக்க மையம் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. தமிழர்களின் தொன்மை வரலாறு சார்ந்த பொருட்களை காட்சிப்படுத்தி, பொதுமக்கள் கண்டுகளிக்கும் விதமாக, இந்த மையத்தை விரைவில் திறக்க வேண்டும்.
காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை காலநிலை பூங்கா திறந்திருக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

