/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அருள் நகர் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
/
அருள் நகர் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
ADDED : மே 07, 2024 11:44 PM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, முதலாவது வார்டுக்கு உட்பட்ட அருள் நகரில், அண்ணா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகள் இருந்தன.
இந்த பூங்கா, பல வருடங்களாக உரிய பராமரிப்பு இல்லாததால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத படியும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் சேதமாகியும் உள்ளன.
அவற்றை சீரமைத்து தரக்கோரி, முதலாவது வார்டு கவுன்சிலர் மு.நாகேஸ்வரன், நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனருக்கு மனு வழங்கியிருந்தார்.
ஆனால், நகராட்சி சார்பில், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
அருள் நகர் பகுதியில் உள்ள பூங்கா சீரழிந்த நிலையில் உள்ளது. அதனால், பூங்காவை பயன்படுத்த முடியாமல், சிறுவர்களும், பெரியோரும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, பயன்பாடின்றி உள்ள இந்த பூங்காவை சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என, பல மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தற்போது, இந்த பூங்கா, சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.
இரவு நேரத்தில், வெளியில் இருந்து வரும் மதுப்பிரியர்கள், காலி பாட்டில்களை பூங்காவுக்குள்ளேயே வீசி செல்கின்றனர்.
எனவே, சிறுவர் விளையாட்டு பூங்காவை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

