/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை வரை நீட்டிக்கப்படுமா மெட்ரோ? சுற்றுலா மேம்படும் என எதிர்பார்ப்பு!
/
மாமல்லை வரை நீட்டிக்கப்படுமா மெட்ரோ? சுற்றுலா மேம்படும் என எதிர்பார்ப்பு!
மாமல்லை வரை நீட்டிக்கப்படுமா மெட்ரோ? சுற்றுலா மேம்படும் என எதிர்பார்ப்பு!
மாமல்லை வரை நீட்டிக்கப்படுமா மெட்ரோ? சுற்றுலா மேம்படும் என எதிர்பார்ப்பு!
ADDED : ஜூன் 26, 2024 01:08 AM

மாமல்லபுரம், ஜசென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதி துவங்கி, மாமல்லபுரம், பூஞ்சேரி சந்திப்பு வரை, ஓ.எம்.ஆர்., - பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜிவ் காந்தி சாலை உள்ளது.
இத்தடத்தில் பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, நாவலுார், சிறுசேரி, படூர், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய பகுதிகள் உள்ளன.
பன்னாட்டு தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், பொறியியல், மருத்துவக் கல்லுாரி கல்வி நிறுவனங்கள், இப்பகுதிகளில் அதிகரித்துள்ளன.
தமிழக அரசின் 'சிப்காட்' தகவல் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளதால், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் இப்பகுதிகளில் குடியேறுகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், நவீன 'ஷாப்பிங் மால்கள், மல்டி பிளெக்ஸ் தியேட்டர்'கள் பெருகியுள்ளன. இத்தகைய மேம்பாட்டு பகுதியில், பொது போக்குவரத்திற்காக சென்னை மாநகர் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் போக்குவரத்திற்கு தனி பேருந்துகள் இயக்கினாலும், மாநகர் பேருந்திலும் அவர்கள் பயணம் செய்கின்றனர்.
நாளுக்கு நாள் நெரிசல்
இங்கு புறநகர் ரயில் உள்ளிட்ட பிற பொது போக்குவரத்து இல்லை. மாநகர் பேருந்து போக்குவரத்து குளறுபடி காரணமாக, தனியார் சவாரி வேன்களிலும் பயணம் செய்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, மக்கள் பெருக்கம் காரணமாக, கார், இருசக்கர வாகனங்கள் அதிகரித்துள்ளன.
ராஜிவ் காந்தி சாலையை ஆறு வழிப் பாதையாக மேம்படுத்தியும், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, பிற பொது போக்குவரத்தும் இன்றியமையாதது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் இயக்கும் அதன் ரயில் போக்குவரத்தின் இரண்டாம் பிரிவு திட்டத்தில், சிறுசேரி 'சிப்காட்' பகுதிக்கும் ரயில் போக்குவரத்தை துவக்கவுள்ளது.
சென்னை மாதவரம் - சிறுசேரி தடம், 45.77 கி.மீ., நீளத்தில், 50 ரயில் நிலையங்களுடன் அமைகிறது. 90 சதவீத நிலத்தடி பாதை, சோழிங்கநல்லுார் - சிறுசேரி வரை 10 கி.மீ.,க்கு மேம்பாலம் என இத்தடம் அமைகிறது.
கடந்த 2019ல், இத்தடத்தில் பணிகள் துவக்கப்பட்டு, துரிதமாக நடந்து வருகின்றன. 2027ல் பணிகள் முடிக்கப்பட்டு, போக்குவரத்து துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுசேரி வரை அமைக்கப்படும் இத்தடத்தை, வருங்கால போக்குவரத்து சூழல் கருதி, சுற்றுலா பகுதியான மாமல்லபுரம் வரை நீட்டிக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
பயணியர் படையெடுப்பு
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, இந்திய, சர்வதேச பயணியர் காண்கின்றனர். சென்னை பகுதியிலிருந்து, வார இறுதி, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களில், இங்கு பயணியர் படையெடுக்கின்றனர்.
அரசு பேருந்து மிகக் குறைவாகவே இயக்கப்படுவதால், தனி வாகனத்தில் சுற்றுலா வருவது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், சுற்றுலா வாகனங்களை நிறுத்த, விசாலமான நிறுத்துமிடம் இல்லாததால், சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. அதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருப்போரூரில் கந்தசாமி கோவில் மற்றும் கோவளத்தில் கடற்கரை, முட்டுக்காட்டில் சுற்றுலா படகு குழாம் ஆகியவை உள்ளன.
இப்பகுதிகளை ஒருங்கிணைத்து, சிறுசேரி பகுதியிலிருந்து மாமல்லபுரத்திற்கு, மெட்ரோ ரயில் பாதையை நீட்டித்து, போக்குவரத்தை துவக்கலாம்.
சிறுசேரி - மாமல்லபுரம் பாதை 30 கி.மீ.,க்குள் அமையும் என்பதால், பாதையை நீட்டிக்க அரசிடம் வலியுறுத்தியும், தற்போது வரை அது தொடர்பாக திட்டமின்றியே உள்ளது.
மாமல்லபுரம் மேம்பாடு, அதற்கேற்ப வருங்காலபோக்குவரத்து வசதி கருதி, இத்திட்டம் குறித்து சட்டசபை கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என, இப்பகுதியினர் மற்றும் சுற்றுலா பயணியர் எதிர்பார்க்கின்றனர்.