/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொளத்துார் சுடுகாட்டிற்கு சிமென்ட் சாலை அமையுமா?
/
கொளத்துார் சுடுகாட்டிற்கு சிமென்ட் சாலை அமையுமா?
ADDED : ஏப் 28, 2024 02:01 AM

அச்சிறுபாக்கம்:கரிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்துார் கிராமத்தில், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சிமென்ட் சாலையாக அமைத்து தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொளத்துார் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், கரிக்கிலி -பாலக்காடு சாலையில் இருந்து பிரிந்து, கொளத்துார், சித்தேரி வழியாக, 750 மீட்டர் நீளம் சுடுகாட்டு பாதை மண் சாலையாக உள்ளது.
இந்த சாலையில், சிறிய பாலம் சேதமடைந்து பள்ளமானதால், சுடுகாட்டிற்கு சடலங்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம், ஊராட்சி நிர்வாகத்தினர் பலமுறை புகார் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, நிரந்தர தீர்வாக சிறிய தரைப்பாலம் மற்றும் சாலையை தரம் உயர்த்தி சிமென்ட் சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

