ADDED : டிச 28, 2024 01:17 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம் ஊராட்சியில் தாதங்குப்பம், வயலுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில், 2,000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு, கடந்த சில மாதங்களாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், பணி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஊராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும், 100 நாள் வேலை வழங்கக்கோரியும், பாக்கம் கிராமத்தினர் 100க்கும் மேற்பட்டோர், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், போராட்டம் நடத்த திரண்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மதுராந்தகம் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் அமுல் மற்றும் போலீசார் பேச்சு நடத்தினர்.
அப்போது, வரும் ஜன., 6ம் தேதி முதல், 100 நாள் வேலை வழங்கப்படும் என, வட்டார வளர்ச்சி அலுவலர் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்த பின், மக்கள் கலைந்து சென்றனர்.